தமிழ் சினிமாவில் 2கே கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் பூஜா. இலங்கையை சேர்ந்த இவர் தமிழ், சிங்களம் மொழி படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். சிம்ப்ளிசிட்டி நடிகை பூஜாவின் 42 வது பிறந்தநாள் இன்று. 


 



நடிகை பூஜாவின் இயற்பெயர் பூஜா கௌதமி உமாசங்கர். இவர் தமிழ் சினிமாவில் முதலில் நடித்த படம் 'உள்ளம் கேட்குமே'. ஆர்யா ஜோடியாக நடித்த பூஜா நடித்த அப்படம் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளி போனது. அதனால் அடுத்ததாக மாதவன் ஜோடியாக அவர் நடித்த 'ஜே ஜே' திரைப்படம் முதலில் வெளியானதால் அது அவரின் அறிமுக படமானது. ஜே ஜே படத்திலும் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று தந்தது. அடுத்தடுத்து அட்டகாசம், பட்டியல், ஓரம் போ என பல படங்களில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. 



இயக்குநர் பாலாவின் 'நான் கடவுள்' படத்தில் கண் தெரியாதவராக பிச்சை எடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்த பூஜாவின் அபாரமான நடிப்பிற்காக பாராட்டப்பட்டார். அவரின் நடிப்பு திறமைக்கு தீனியாய் அமைந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.  ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தாலும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்து இருந்தார். 


 



இலங்கையை சேர்ந்த தொழிலதிபருடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் வரை போகவில்லை. பின்னர் 2016ம் ஆண்டு பிரஜன் டேவிட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் இருந்து முற்றிலுமாக விலகிய பூஜா இலங்கையிலேயே செட்டிலாகி விட்டார். இருப்பினும் அவரது ரசிகர்கள் மீண்டும்  அவர் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.