2012 ஆம் ஆண்டு பீட்சா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் கார்த்திக் சுப்புராஜ். இன்றுடன் தமிழ் சினிமாவில் இயக்குநராக 11 ஆண்டுகளை கடந்துள்ளார்.

நாளைய இயக்குநர்


இயக்குநர் ஆக ஆசைப்படுபவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்த ஒரு நிகழ்ச்சி என்றால் நாளைய இயக்குநரை சொல்லலாம். வாராவாரம் ஒரு குறும்படங்கள் எடுத்து தேர்ந்த இயக்குநர்களால் இந்த படங்கள் விமர்சனம் செய்யப்பட்ட. இப்படியான சூழலில் தொடர்ச்சியாக தன்னை நிரூபித்துக் கொண்டவர் கார்த்திக் சுப்புராஜ். இதே காலத்தில் தான் இயக்குநர் ஆவதற்கு குறும்படங்கள் அனுமதி சீட்டுகளாக கருதப்பட்டன. குறும்படம் என்கிற வடிவத்தில் ஒரு கதைக்கு சில நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. அந்த கதையில் ஒரு ட்விஸ்ட் நிச்சயமாக இருக்க வேண்டும். கதைக்கு எவ்வளவு பொருந்திபோகிறது என்பது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஆனால் அந்த ட்விஸ்ட்டை வைத்து ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்த முடிகிறதா எனபதே முக்கியமான நோக்கமாக கருதப்பட்ட்து.


கார்த்திக் சுப்புராஜ்


இப்படியான சூழலில் இருந்து தன்னை கட்டமைத்துக் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய முதல் படமான பீட்சா படத்தை இயக்கினார். பீட்சா படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதற்கான காரணம் கடைசியில் இருக்கும் ஒரு ட்விஸ்ட் தான். இந்தப் படம் கார்த்திக் சுப்புராஜுக்கு பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது.


ஜிகர்தண்டா

தனது இரண்டாவது படமாக ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களில் இன்றுவரை சிறந்த படமாக ரசிகர்களால் சொல்லப் படுகிறது. கொரியத் திரைப்படத்தின் ரீமேக் என்று விமர்சிக்கப்பட்டாலும் திரைக்கதை ரீதியாகவும் தன்னுடைய முதல் படத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசப் பட்ட ஒரு திரைமொழியை இந்தப் படத்தில் கையாண்டிருந்தார்.

தன்னுடை அடுத்தடுத்தப் படங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள அவருக்கு இருந்த ஆர்வம் தான் இறைவி படத்தை தன்னுடைய மூன்றாவது படமாக அவரை இயக்கியதற்கு காரணம். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இறைவி திரைப்படம் கார்த்திக் சுப்புராஜின் திரை பயணத்தில் ஒரு முக்கியமான முயற்சி. இதனைத் தொடர்ந்து மெர்குரி என்கிற எக்ஸ்பெரிமெண்ட் செய்தார்.


பேட்ட


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முற்றிலும் ரசிக சம்பவமாக அவர் இயக்கிய படம்தான் பேட்ட. ரஜினியிடம் தான் ரசித்த ரசிகர்கள் கொண்டாடிய அனைத்தையும் வைத்து உருவாக்கப் பட்ட ஒரு படமாக பேட்ட் இருந்தது. தனுஷை வைத்து அவர் இயக்கிய ஜகமே தந்திரம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிக சுமாரான வரவேற்பைப் பெற்றது. விக்ரம் நடித்து வெளியான மகான் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தனது ஒவ்வொரு படத்திலும் கதை ரீதியாகவும் , காட்சி அமைப்பதிலும் தனித்துவமாக எதையாவது ஒன்றை உருவாக்க விரும்புபவர் கார்த்திக் சுப்புராஜ் ஆனால் பல நேரங்களில் அவரையே அறியாமல் அவருக்குள் மார்ட்டின் ஸ்கார்செஸி மற்றும் குயிண்டன் டாராண்டினோ ரசிகன் வெளியே வந்து சகிக்க முடியாத சில காட்சிகளை உருவாக்கி விடுகிறார். முடிந்துவிட்டது என்று நினைக்கிற நேரத்தில் தேவையில்லாத ஒரு ட்விஸ்டை போட்டு கதையை முடிக்கும் வழக்கத்தைத் தவிர கார்த்திக் சுப்புராஜ் ஒரு சம்பவக்காரன் தான்.