ஏபிபி நாடு வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


தமிழ் திரையுலகில் வில்லன் நடிகர்கள் எந்தளவு பிரபலம் அடைகிறார்களோ, அதே அளவு அவர்களுக்கு அடியாட்களாக வரும் சில நடிகர்களும் சில நேரங்களில் பிரபலம் அடைவார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் பாபி சிம்ஹாவின் அடியாளாக படம் முழுக்க நடித்து பிரபலமானவர் நடிகர் காளையன். சுல்தான் படத்திலும் 100 அடியாட்களில் ஒருவராக நடித்திருப்பார். ஜெகமே தந்திரம் படத்தில் பிரபலமடைந்த ரகிட, ரகிட பாடலின் தொடக்க ரகிட, ரகிட பீட்டின் தொடக்க காட்சியிலும் வந்து அசத்தியிருப்பார். அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியை கீழே காணலாம்.




“ 2007ம் ஆண்டு கருப்பசாமி குத்தகைதாரர் படம் மதுரையில எடுத்துகிட்டு இருந்தாங்க. அப்போ,ஷூட்டிங் வேடிக்கை பாக்க போனப்ப, கூட இருந்த குமார் அண்ணன் நீங்க படம் நடிக்க வேண்டிதானேனு சொன்னாரு. நீ போயி நில்லு காளை. நீ போயி நடினு சொன்னாரு. நான் அண்ணே எனக்கு இதைப்பத்தி ஒன்னும் தெரியாது. என்னையைப் போயி தள்ளி விட்றீங்கனு கேட்டேன்.


அந்தண்ணன், இல்ல காளை. நீ போயி நடி. நல்லா உடம்பும், கிடம்புமா இருக்கல. நீ போயி நடினு சொன்னாரு. உடனே, ஷூட்டிங் மேனேஜரை கூப்பிட்டு சொன்னாரு. இது என் தம்பி. நடிக்க வைங்க அப்படினு. மேனேஜரும் அவர் நல்லாதானே இருக்காரு. வெள்ளை வேட்டி சட்டை கட்டிட்டு வரச் சொல்லுங்கனு சொல்லிட்டாரு. வெள்ளை, வேட்டி கட்டி ஒரு ஓரமா நிப்பேன். உருட்டுக்கம்பு வச்சுகிட்டு ஒரு ஓரமா நிப்பேன்.


அவங்க டேக், ஆக்‌ஷன்லா சொல்லுவாங்க. அப்போ இதெல்லாம் நமக்கு தெரியாது. அவங்க போ சொன்னாலும் போ மாட்டோம். கம்பை வச்சுகிட்டு அப்டியே நிப்பேன். கரண் சாரை மிரட்டுற சீன்ல எல்லாரும் சண்டை போட்டு போயிடுவாங்க. நான் மட்டும் நின்னுகிட்டே இருப்பேன். அப்போ கரண்சார் சொல்லுவாரு.. நீங்க போனும் போங்க. அப்றம் பின்னாடி போவேன். அப்போ ஒரு டயலாக் போட்ருப்பாங்க. தொழிலுக்கு புதுசா இருப்பான் போல. ரொம்ப லேட்டா போறான் அப்படினு. அப்போதான் ஒரு ஆர்வம் வந்துச்சு.




காமிரா முன்னாடி டயலாக் பேசனும்னு. அடுத்த படத்துல பேசுவோம். அடுத்த படத்துல பேசுவோம்னு. ஷூட்டிங் வந்தவங்க என்னை போட்டோ எடுத்துகிட்டு போயிட்டாங்க. ஜிம்பாய்ஸ் மாதிரி கூப்பிட்டாங்க. ரெண்டு, மூணு படம் போனேன். நம்மளை நடிக்கவும் விட மாட்றானுங்க. ஓரமாவே நிக்க சொல்றாங்கனு போர் அடிச்சுருச்சு. அப்பாவோட பிசினஸ் இருந்துச்சு. இதை பாக்காம, இப்படி சென்னைக்கு போயிட்டு, போயிட்டு வர்றோமேனு போர் அடிச்சுருச்சு. கருப்பசாமி குத்தகைதாரர்ல 100 ரூபாய்தான் சம்பளமே.


2012ல ஒரு ஆடிஷன். என் பிரண்டு ஒருத்தரு. நடிக்க வாங்கனு போன் பண்ணாரு. சரி போயி பாப்போமேனு  போனேன். கார்த்திக் சுப்புராஜோட கோ டைரக்டர். மதுரை ஸ்லாங்கல பேசுங்கனு சொன்னாங்க. நம்ம பேசவும் அவருக்கு பிடிச்சு போச்சு. போயிட்டு போன் பண்றேனு சொன்னாங்க. ஒரு வாரம் கழிச்சு போன் வந்துச்சு. சென்னைக்கு வாங்கனு சொன்னாங்க. நான் அடுத்த வாரம் வர்றேன். இந்த வாரம் வர முடியாதுனு சொல்லிட்டேன். ஏன்னா எனக்கு எதுவுமே தெரியாது. அதான்.


ஒரு வாரம் கழிச்சு போனா, ஒருத்தர் உக்காந்து இருக்காரு. எல்லாரும் இருக்காங்க. எனக்கு யாரையும் தெரியாது. என்ன பண்றீங்கனு கேட்டாரு. இதெல்லாம் பண்றேனு சொன்னேன். உடனே நீங்க இந்த படத்துல பிக்ஸ்ட்னு சொன்னாங்க. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. டயலாக் பேசவே வராது. ஆனா, ஆர்வம் இருந்துச்சு. கார்த்திக் சார்கிட்ட நல்லா நடிப்பேனானு கேட்டேன். அவரு நீங்க நடிக்கவே வேண்டாம். என்ன தெரியுதோ அதை மட்டும் பண்ணுங்கனு சொன்னாரு. அந்த படம் மெகாஹிட். லைப் கொடுத்தது கார்த்திக் சுப்புராஜ் அண்ணன்தான். சிரிச்சுகிட்டே வேலை வாங்குறவரு கார்த்திக் சுப்புராஜ்.




ஷூட்டிங் முடியவும் ஊருக்கு வந்துடுவேன். இங்க ஊரைச் சுத்துறோமோ. அதான். நான் தலைவரோட பேன். தலைவரை பாக்கனுங்குறதுக்காக அவரோட காசிக்கு போயிட்டேன். மேக்கப் போட்டு அவரு நடந்து போறதை பாக்குறப்ப எனக்கே விசிலடிக்கனும்னு தோணிடுச்சு. அந்தளவு ஸ்டைல் அவரு. நான் நேரா போயி பேசிட்டேன். என் பேரு காளையன். மதுரையில இருந்து வர்றேன்னு. அவரும் பேசிட்டாரு. போட்டோ எடுக்கனும்னு கேட்டேன். ஆனா, எடுக்க முடியல.


ஷூட்டிங் முடியப்போறே அன்னைக்கு, எல்லாரும் கேக் வெட்டுனாங்க. தலைவரு ஷூட்டிங் முடிஞ்சு கார்ல ஏறப்போறப்ப, சட்டுனு என்னை பாத்தாரு. போட்டோ எடுக்கனும்னு சொன்னீங்கல. இங்க வாங்கனு கூப்பிட்டாரு. எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அவ்ளோ கூட்டத்துல வேகமா ஓடிப்போயிட்டேன். ஆனா, கேமரா இல்ல. அப்புறம் என்கிட்ட போன் வச்சுருக்கீங்கல. போன்ல எடுங்கனு சொன்னாரு. அப்புறம் போன்ல எடுத்தேன். அப்போ மணி விடியற்காலை 3 மணி. அவரை அடிக்கப்போறோ மாதிரி, திட்டுற மாதிரி சீன். ஆனா, நடிக்கவே வர்றல.” இவ்வாறு அவர் கலகலவென்று பேசினார்.  


நன்றி : சினிஉலகம்