ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்னையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 4 ஆண்டுகள் கழித்து திரையரங்கத்தில் தன்னுடைய படத்தை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், தன் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார்.


தமிழில் கலக்கும் நிமிஷா சஜயன்


சமீப காலங்களில் மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்த மிகத் திறமையான நடிகைகளில் ஒரு நிமிஷா சஜயன். மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன், மாலிக் உள்ளிட்டப் படங்களில் நடித்த நிமிஷா சஜயன் சமீபத்தில் சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அவரது நடிப்பு மக்களால் பாராட்டப்படுகிறது. இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்


அவர் அழகா இல்லை









ஜிகர்தண்டா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள திரையரங்கத்திற்குச்  சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார்கள் படக்குழுவினர். சமீபத்தில் பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்தபோது  ஒருவர் கார்த்திக் சுப்பராஜிடம்.  சித்தா மற்றும் ஜிகர்தண்டா படத்தில் நடித்த நிமிஷா சஜயன் அழகாக இல்லை என்றாலும் சிறப்பாக நடிக்கிறார் என்று கூறியிருந்தார். இதனை மறுத்து பேசிய கார்த்திக் சுப்பராஜ்  “அவங்க அழகா இல்லைனு நீங்க எப்டி சொல்றீங்க. உங்களுடைய பார்வையில் பிரச்சனை இருக்கிறது. யாரும் யாரையும் நீங்கள் அழகாக இல்லை என்று சொல்லும் உரிமை கிடையாது. அது ஒரு மிகப்பெரிய வன்முறை” என்று அந்த நபரை கண்டித்துள்ளார்.


கார்த்திக் சுப்பராஜின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது. இணையதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பகிர்ந்து அவரை பாராட்டி வருகிறார்கள் மக்கள்