கோவை புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் ரசிகர்களை சந்தித்து உரையாடினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா, “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றி பயங்கரமான சந்தோசத்தை தந்துள்ளது. தலைவர் ரஜினிகாந்த் படம் பார்த்து விட்டு, குறிஞ்சி மலர் என இப்படத்தை பாராட்டினார். அந்த வார்த்தை இது ஒரு அரிய படைப்பு என்பதை காட்டும் வகையில் இருந்தது. கார்த்திக் சுப்பராஜ் ஒரு அரிய படைப்பாளர். நாம் படத்தை பற்றி பேசக்கூடாது. படம் தான் பேச வேண்டும் என சொன்னவர் கார்த்திக் சுப்பராஜ். இது அவருடைய கேரியர் பெஸ்ட் படம். இதை மக்கள் கொண்டாடுவதை பார்க்க சந்தோஷமாக உள்ளது.
இறைவி படம் தான் எனக்கு முதல் முறையாக கேட்டை உடைத்து பாதை போட்டு தந்தது. அதன் பின்னர் தான் நல்ல நடிகர் என எனக்கு பெரிய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படத்திற்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர் ராகவா லாரன்ஸ் ஆன் ஸ்கிரீன் மட்டுமின்றி ஆப் ஸ்கிரீன் ஹீரோ. மக்களின் ரசிப்பு தரம் உயர்ந்துள்ளது. வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி வார நாட்களிலும் இந்த படம் நிறைய இடங்களில் ஹவுஸ் புல்லாக இருக்கிறது. ரஜினிகாந்திடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டை பிறவியில் கிடைத்த பெரிய பாராட்டாக பார்க்கிறேன். அடுத்ததாக கில்லர் என்ற படம் செய்கிறேன். ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த் வீட்டு பிள்ளை மாதிரி. அவர் குறிஞ்சி மலர் என பாராட்டியது எங்களுக்கு புஸ்ட்டாக அமைந்துள்ளது. இன்னும் நன்றாக நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும். நல்ல கதைகள் என்னை தேர்வு செய்கின்றன. அடுத்து தனி ஹீரோ என்ற பாதையில் செல்ல உள்ளேன். டைரக்டர் சூர்யா ஆனதே, ஆக்டர் சூர்யா ஆவதற்காக தான். தற்போதைய நிலைக்கு என்னை நானே இயக்க வேண்டும். ஒரு தரமான ரேர் பிஸ் தான் கார்த்திக் சுப்பராஜ்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய கார்த்திக் சுப்பராஜ், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நன்றாக போய் கொண்டுள்ளது ரொம்ப சந்தோஷம். இது எனது முக்கியமான காலகட்டத்தின் படம். இந்தப் படம் வருவதற்கு முன்பு பதட்டம் இருந்தது. தற்போது கிடைக்கும் வரவேற்பு உற்சாகம் அளிக்கிறது. ஜிகர்தண்டா 1 பலருக்கு பிடித்த படமாக இருந்தது. அதைவிட பெஸ்ட் தர வேண்டும் என நினைத்தேன். நான் பண்ணிய படங்களில் இது தான் எனது பெஸ்ட். ஜிகர்தண்டா 1 முடித்த போது ஜிகர்தண்டா 2 பண்ணும் எண்ணம் இல்லை. இந்தப் படம் வர ராகவா லாரன்ஸ் தான் காரணம். ஜிகர்தண்டா 3வது பார்ட் எடுப்பதற்கான சின்ன எண்ணம் உள்ளது. அதை உடனே பண்ணாமல், சில ஆண்டுகள் கழித்து பண்ண நினைக்கிறேன்.
எல்ஜியூ என்பது எனக்கு பிடித்த விஷயம். அது செம ஐடியா என லோகேஷ் கனகராஜிடம் கூறினேன். நான் ஒரே மாதிரி படங்கள் அடுத்தடுத்து பண்ணமாட்டேன். வேறு வேறு களங்களில் படம் பண்ண நினைப்பேன். அதனால் கேசியூ என்பது இல்லை. டெலிகிராமில் படம் வந்தால் திரையரங்குகளுக்கு செல்வதில்லை என்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரசிகர்களின் மனநிலை தற்போது இல்லை. ரசிகர்கள் திரையரங்குகளில் படம் பார்க்க விரும்புகின்றனர். ஒரு படத்தின் கலெக்சன் என்பது முழுக்க தயாரிப்பாளர் சார்ந்த விஷயம். நடிகர்கள், ரசிகர்களுக்கு அது தேவையில்லாத விஷயம். இந்த படத்திற்கு குறைந்த அளவிலான எதிர்மறை விமர்சனம் தான் வந்தது. அடுத்த படம் குறித்து தற்போது யோசிக்கவில்லை. யானைகளுக்கு மனிதன் அளவு உணர்ச்சிகள் இருக்கும். அவைகளுக்கு பழி, மன்னிக்கும் தன்மை இருக்கும் என படித்ததை படத்தில் வைத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ராகவா லாரன்ஸ், “திருச்சி, மதுரை போல கோவையிலும் படம் ஹவுஸ் புல்லாக செல்ல காரணமான மக்களுக்கு நன்றி. குறிஞ்சி மலர் என படத்தை பாரட்டிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. அவர் சூட்டிங் போகும் நேரத்தை தள்ளி வைத்து எங்களிடம் படம் குறித்து பேசினார். நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா உடன் நடித்து பெயர் வாங்குவது கஷ்டம். தற்போது இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வருகிறது. மக்களுக்கு எது பிடிக்கிறதோ, அதை பண்ண வேண்டும். வெளி இயக்குநர்களுக்கு படம் பண்ண வேண்டும் என முடிவு செய்துள்ளேன். இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்த போதே, இது என் லைஃப் டைம் படம் என்பது தெரிந்தது. இது சரியாக வருமா என இருந்த சந்தேகங்கள் கார்த்திக் சுப்பராஜின் நம்பிக்கையால் சிறப்பாக வந்தது” எனத் தெரிவித்தார்.