கஜினி பட நடிகை ஜியா கானை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட நடிகர் சூரஜ் பஞ்சோலி குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.


ஜியா கான் தற்கொலை


கடந்த 10 ஆண்டுகளாக பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பி வரும் தற்கொலை வழக்குகளில் ஜியா கான் தற்கொலை வழக்கு. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்து வளர்ந்து 2007ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமாகி இளம் நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஜியா கான். இந்தியாவின் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் படத்தில் பாலிவுட்டின் உச்ச நடிகர் அமிதாப் பச்சன் உடன் அறிமுகமாகி முதல் படத்திலேயே மிகப்பெரும் லைம்லைட்டைப் பெற்றவர் ஜியா கான்.


கஜினி வாய்ப்பு


இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸின் கஜினி படத்தில் நடிகர் ஆமிர்கான் உடன் நடித்தார்.  அதன் பின் பெரும் வாய்ப்புகள் அமையாத நிலையில், இறுதியாக ஹவுஸ்ஃபுல் படத்தில் அக்‌ஷய் குமாருடன் நடித்திருந்தார் ஜியா கான். தொடர்ந்து,  2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி ஜியா கான் காலை 11 மணியளவில் ஜியா கான் தூக்கிட்டு உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. 


தற்கொலை கடிதம்


நடிகரும் காதலருமான சூரஜ் பஞ்சோலி தான் தனது இறப்புக்கு காரணம் எனக் கூறி ஜியா கான் எழுதியதாக ஆறு பக்க இறுதி மடல் ஒன்று அவரது வீட்டில் கைப்பற்றப்பட்டது. ஜியா கான், இறப்பதற்கு முன் கருக்கலைப்பு செய்ததாகத் தகவல் வெளியான நிலையில், காதலர் சூரஜ் பஞ்சோலி தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஜியா தன் கைப்பட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாதகவும் கூறப்பட்டது.


தொடர்ந்து தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணை வளையத்தில் எடுக்கப்பட்டார், அதன் பின் ஜூலை 2, 2013 அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


சிபிஐ விசாரணை


இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஜியா கானின் தாய் ராபியா கோரியிருந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டது. 


தொடர்ந்து 2015ஆம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 இன் கீழ் சூரஜ் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய அரசு தரப்பு சாட்சியான ஜியாவின் தாயார் ராபியா கான், இது தற்கொலை அல்ல கொலை என்று தான் நம்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


காதலர் விடுவிப்பு


இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாக சூரஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது.


இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த சூழலில், ஜியா கானை தற்கொலைக்குத் தூண்டிய குற்றம் சாட்டப்பட நடிகர் சூரஜ் பஞ்சோலி, இன்று இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, “இது ஒரு கொலை வழக்கு, என் மகளுக்காக நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகுவேன், நான் நம்பிக்கையை கைவிட மாட்டேன், தொடர்ந்து போராடுவேன்” என ராபியா தெரிவித்துள்ளார்.