6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதம் முதல் தேதி பள்ளி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதேபோல், ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜுன் மாதம் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார். 


அதேபோல் மார்ச் மாதம் 18 ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அட்டவணையில்  மார்ச் மாதம் 19ஆம் தேதி 11ஆம் வகுப்புக்கான பொத்தேர்வு தொடங்கும் எனவும், ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி 10ஆம் வகுப்புகான பொதுத்தேர்வு தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் தாமதமின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பொதுத் தேர்வு விடை திருத்தும் பணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்படுவதாக குற்ச்சாட்டு எழுந்துள்ளதே என செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்படி எப்படி செய்யமுடியும். முதலில் தாங்கள் திருத்துவது அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி என எப்படி கண்டு பிடிக்க முடியும். இந்த குற்றச்சாட்டு தவறானது என கூறியுள்ளார். 


விடைத்தாள் திருத்தும் பணியில் இருப்பவர்கள், கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இருக்கும் பட்சத்தில் அதற்கு உகந்த மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் மதிப்பெண்கள் குறைவாக வந்து விட்டால் கவலைப்பட வேண்டாம். முதலமைச்சர் ஏற்கனவே கூறியதைப் போல் மதிப்பெண்கள் முக்கியம் தான். ஆனால் அனைவரும் தங்களுக்கான தனித் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும், இந்த மதிப்பெண்களை வைத்து மனம் வருத்தப்பட வேண்டாம். உங்கள் திறமைக்கான நாற்காலி ஏதோவொரு இடத்தில் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள் எனவும் அவர் கூறினார்.