மார்வெல் திரையுலகின் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், உலகம் முழுவதும் பிரபலாமானவர் ஜெர்மி ரன்னர். பல்வேறு சக்திகளை கொண்ட சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் வெறும் வில் - அம்புகளை கொண்டு, சாகசம் செய்யும் அவரது கதாப்பாத்திரம், பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்காக இரண்டு முறை இவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மி ரென்னர் (courtesy: getty)
விபத்தில் சிக்கிய ஜெர்மி ரென்னர்:
இதனிடையே, ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று பனிப்புயல் ஒன்று தாக்கியது; இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டுப் பகுதியில் குவிந்திருந்த பனியை அகற்றும் பணியில் ஜெர்மி ரென்னர் ஈடுபட்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் விபத்தில் சிக்கினார்.
மருத்துவ அறிக்கை:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், படுகாயமடைந்த ரென்னரை மீட்டு, விமானம் மூலம் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; அங்கு உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது;
அவரது உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், “ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரென்னர் ஆபத்தான நிலையில் உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஜெர்மியின் குடும்பத்தினர் அவருடன் இருப்பதாகவும், சிறந்த சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது; அவர் விரைந்து குணம் பெற ரசிகரகள் பலரும் வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மார்வெல் திரையுலகம்:
உலகிற்கு வரும் ஆபத்துகளை சூப்பர் ஹீரோக்களை கொண்டு தடுப்பதை மட்டுமே, முக்கிய கதைக்களமாக கொண்டு மார்வெல் நிறுவனம் தனக்கென ஒரு தனி திரையுலகை கட்டமைத்துள்ளது; உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் படங்கள், சர்வ சாதாரணமாக சில ஆயிரம் கோடிகளை வசூலாக குவித்து வருகின்றன. மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரூ.22 ஆயிரம் கோடியை வசூலித்து, உலக அளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது.
ஹாவ்க்-ஐ கதாபாத்திரம்:
அந்நிறுவனத்தின் சார்பில் 2011ம் ஆண்டு வெளியான தோர் திரைப்படத்தில் கிளிண்ட் பார்ட்டன்/ஹாவ்க்-ஐ கதாபத்திரத்தில் அறிமுகமானார் ஜெர்மி ரென்னர். அதைதொடர்ந்து வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படங்களில் ஜெர்மி முக்கிய பங்கு வகித்தார். மார்வெல் திரைப்படங்களில் அவர் இடம்பெறும் அணியானது, இதுவரை தோல்வியையே சந்தித்தது இல்லை. அவெஞ்சர்ஸ், ஏஜ் ஆஃப் அல்ட்ரான், சிவில் வார் மற்றும் எண்ட் கேம் என அனைத்து திரைப்படங்களிலும், ஜெர்மி ரன்னர் நடித்த ஹாவ்க்-ஐ கதாபாத்திரம் இடம்பெற்ற அணி தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவரது நடிப்பில் டிஸ்னி பிளஸ்ஸில் சீரிஸ் ஒன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.