சைரன் படத்துக்கு பத்திரிக்கையாளர் காட்சியில் கிடைத்த பாராட்டுகளை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். 


2024 ஆம் ஆண்டின் ஜெயம் ரவியின் முதல் படமாக “சைரன்” படம் இன்று முதல் தியேட்டரில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் அந்தோனி பாக்யராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, அழகம் பெருமாள், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது. 


செல்வகுமார் எஸ்.கே. இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் ரூபன் எடிட்டிங் பணியை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே சைரன் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமல்லாமல் சாக்லேட் பாய், இளம் வயது தோற்றங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி இப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் சைரன் படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு படத்தை கண்டுகளித்தனர். தொடர்ந்து இப்படத்தின் கதை புதிதாக இருப்பதாக ஜெயம் ரவிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். மீண்டும் ஜெயம் ரவியை வெற்றிப்பாதைக்கு இப்படம் அழைத்து செல்லும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு காட்சி முடிந்ததும் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.






அப்போது அவரிடம், “ஜெயம் ரவியை நாங்கள் லவ்வர் பாயாக பார்த்திருக்கிறோம். நிறைய பெண்கள் விரும்புவார்கள். இந்த படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள். உங்கள் மனைவி ஆர்த்தி என்ன சொன்னார்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்கு, "என் மனைவி ரொம்ப ஃபீல் பண்ணாங்க. தினமும் காலையிலிருந்து அந்த வெள்ளை தாடியுடன் ஊர் சுற்றிக் கொண்டு வீட்டிற்கு வரும்போது ஒரு மாதிரி பார்ப்பார்கள்.  'என்ன இவன் என்ன யோசிச்சிட்டு இப்படி பண்ணிகிட்டு இருக்கான்?' என்று தான் பார்ப்பார்கள். ஆனால் ஆர்த்திக்கு என் மேல் ஒரு நம்பிக்கை உண்டு. வேலையில் ஒழுங்காக இருப்பான் என்ன நினைப்பார். அந்த நம்பிக்கையால் தான் என்னை சுதந்திரமாக செயல்பட சொன்னார். இன்னைக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாராட்டுக்கள் கிடைத்த போது நான் செய்தது சரிதான் என நினைத்துக் கொண்டேன் என ஜெயம் ரவி தெரிவித்தார். இதனால் பத்திரிக்கையாளர் சந்திப்பு கலகலப்பாக சென்றது. 




மேலும் படிக்க: Siren Review: தமிழ் சினிமா தொடாத கதை.. ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!