என். கல்யாண் கிருஷ்ணன் - ஜெயம் ரவி காம்போ 'பூலோகம்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'அகிலன்'. பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த காம்போவில் வெளியான 'பூலோகம்' திரைப்படத்தின் திரைக்கதை நல்ல அமைப்பை கொண்டு இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக பாக்ஸர் ரோலில் மீண்டும் ஜெயம் ரவி களமிறங்கியதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியானதும் மக்களின் கவனத்தை ஈர்க்க தவறியது.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு 'அகிலன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல மாதங்களுக்கு முன்னரே வெளியாக இருந்த இப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. படம் வெளியிடுவதில் இருந்த சிக்கல் அனைத்தும் விலகி தற்போது படம் வெளியாக தயாராகியுள்ளது. வரும் மார்ச் 10ம் தேதி வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். மும்மரமாக ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் இந்த தருணத்தில் 'அகிலன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'துரோகம்' இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்ததை அடுத்து தற்போது அது வெளியாகியுள்ளது. சாம்.சி.எஸ் மற்றும் சிவம் மிரட்டலான குரலில் பாடியுள்ள இந்த 'இருக்கும் போதும் துரோகம் பண்ணு...' பாடலின் லிரிகள் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நடிகர் ஜெயம் ரவி அகிலன் திரைப்படத்தை தொடர்ந்து 'இறைவன்' படம் மற்றும் 'தனி ஒருவன் 2 ' படத்திலும் நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஜெயம் ரவி திரைப்படங்கள் வெளியாவதில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஜெயம் ரவி ரசிகர்கள்.