ஜெயம் ரவி , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படம் வரும் பிபரவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


சைரன்


ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அழகம்பெருமாள், யோகி பாபு, அனுபமா பரமேஷ்வர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் சைரன். விஸ்வாசம், அண்ணாத்தே உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதிய ஆண்டனி பாக்கியராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.






நடிகர் ஜெயம் ரவி இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இதில் ஒருவர் கைதியாகவும் இன்னொருவர் ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இடம்பெற்றுள்ளார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். ஜெயம் ரவி நடித்து கடைசியாக வெளியான இறைவன் படம் சரியான வரவேற்பைப் பெறாத நிலையில் சைரன் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன.


ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா, சரண்யா உள்ளிட்டோர் நடிக்கும் பிரதர் படத்தை எம்.ராஜேஷ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ், இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது. முதல் பாகத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க இரண்டாவது பாகத்தில் முன்னணி நடிகர் ஒருவர் வில்லனாக் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் அல்லது நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


 இது தவிர்த்து புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஜீனி படத்தில் நடித்து வருகிறார். 100 கோடி செலவில் பான் இந்தியப் படமாக இப்படம் உருவாகி வருகிறது. வமிகா கப்பி, கல்யாணி பிரியதர்ஷன் , க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் . வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பாக ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.




மேலும் படிக்க :  Sandhya Ragam: உடை கட்டுப்பாட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த மாயா.. முடிவை தீர்மானிக்கும் மக்கள் - ஜீ தமிழில் அடுத்த அதிரடி அறிவிப்பு.!!


Singapore Saloon Trailer: ஹேர் ஸ்டைலிஸ்ட்டாகும் கனவில் ஆர்.ஜே.பாலாஜி: வெளியானது சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர்