எடிட்டர் ராஜாவின் மகன்களான ராஜா மற்றும் ரவி இருவரும் தமிழ் திரையுலகில் அறிமுகமான படம் ஜெயம். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து அண்ணனின் இயக்கத்திலேயே நடித்து வந்தார் ஜெயம் ரவி. இவர்கள் கூட்டணியில் ரிலீசான எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒரு திறமையான நடிகர் ஜெயம் ரவி. இயக்குனர் மணிரத்னத்தின் காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன் 1" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அந்த படத்தின் ரிலீஸ்காக திரை ரசிகர்களை போல் அவரும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.
இவர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோடு அவர் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சேர்த்து கொண்டாடி வருகிறார் ஜெயம் ரவி. இதற்காக விழா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த விழாவில் ஜெயம் ரவியின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவரது மனைவி ஆர்த்தி, மகன்கள் மற்றும் குடும்பத்தினரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். சென்னையில் நடைபெற்ற இந்த விழாவின்போது ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார் ஜெயம் ரவி.
இதில் பேசிய அவர், சினிமாவில்தான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு தனது அண்ணன் மோகன் ராஜா தான் காரணம் என கூறினார். வெற்றி கொடுத்தாலும் நல்ல படங்களை மட்டும் பண்ண வேண்டும், அதற்காக காத்திருக்க வேண்டும் என அப்பா சொல்வார். அதனால் தான் நான் இந்த 20 ஆண்டுகளில் 25 படங்கள் மட்டுமே பண்ணியுள்ளேன். இதனால் எனக்கு தோல்வி படங்களும் குறைவு என ஜெயம் ரவி தனது சக்சஸ் பார்முலாவை கூறினார்.