திரைத்துறை, அரசியல் ஆகிய இரண்டிலும் கோலோச்சிய ஜெயலலிதா பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதுடன், ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பெரும் நடிகைகளுள் ஒருவராகக் கொண்டாடப்படும் ஸ்ரீதேவியின் நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஒரு நடிகையாக தன் பயணத்தைத் தொடங்கி அதில் வெற்றிகரமாகப் பயணித்ததுடன், அரசியல்களத்திலும் நுழைந்து வெற்றிக்கொடி ஏற்றி ஆறு முறை முதலமைச்சராகி சாதனை படைத்து பெரும் ஆளுமையாக விளங்கியவர் ஜெயலலிதா. ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் 1965ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமான ஜெயலலிதா, எம்ஜிஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகையாக உருவெடுத்தார்.சந்திரோதயம், யார் நீ, அடிமைப் பெண், சூர்யகாந்தி உள்ளிட்ட படங்கள் இன்றும் ஜெயலலிதாவால் நினைவுகூரப்பட்டு ரசித்து பார்க்கப்படுகின்றன.
மேலும் 1991ஆம் ஆண்டு தன் 43 வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்ற ஜெயலலிதா, தொடர்ந்து பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தவும் செய்தார். கடந்த செப்டம்பர் 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்கள் கழித்து சிகிச்சைப் பலனின்றி டிசம்பர் 5, 2016 உயிரிழந்தார். இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின்
அதேபோல் கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகையாக உருவெடுத்து கொலோச்சி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னடம்,இந்தி என நாடு முழுவதும் பான் இந்தியா ஸ்டாராக 80களிலேயே வலம் வந்த ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு இதே நாளில் மறைந்தார்.
பாலிவுட்டில் தன்னிகரற்ற நடிகையாக உருவெடுத்து உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த ஸ்ரீதேவி தமிழில் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தைத் தொடங்கினார்.
தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்குச் சென்று கோலோச்சிய வெகு சில நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி பாலிவுட்டில் தன்னிகரற்ற நடிகையாக உருவெடுத்து உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.
தமிழில் கமல், ரஜினி தொடங்கி தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி சினிமாக்களின் உச்ச நட்சத்திரங்களுடன் அதிக படங்களில் நடித்து கொண்டாடித் தீர்க்கப்பட்ட ஸ்ரீதேவி, 1996ஆம் ஆண்டு இந்தி சினிமாவின் பிரபல இயக்குநரான போனி கபூரை மணந்து கொண்டு பாலிவுட் மருமகளாக செட்டில் ஆனார். ஜான்வி, குஷி எனும் இரு மகள்களுடன் தொடர்ந்து ஏராளமான படங்கள் நடித்து, இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வந்த ஸ்ரீதேவி, 2018ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாய் சென்றிருந்தபோது அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் குளியலறையில் பாத் டப்பில் மூழ்கிய நிலையில் உயிரிழந்து கிடந்த ஸ்ரீதேவியின் உடல் தொடர்ந்து இந்தியா கொண்டு வரப்பட்டு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
இந்நிலையில் ஜெயலலிதா, ஸ்ரீதேவி இருவரயும் நினைவுகூறும் வகையில் இருவரும் ஒன்றாக இருக்கும் ஃபோட்டோ பகிர்ந்து நடிகை கஸ்தூரி இருவருக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேபோல் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய நடிகை குஷ்பு, “ஸ்ரீதேவியின் வசீகரம், அவருடைய குழந்தை போன்ற அப்பாவித்தனம், உணர்ச்சிகள், நடன அசைவுகள் ஆகியவற்றுக்கு ஒருவர் இணையாக முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ”மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கம் போன்ற இதயத்தையும் எஃகு போன்ற மனதையும் கொண்டவர். அவருக்கு முன்னும் பின்னும் அவர் போல ஒருவர் இருந்ததில்லை” என்றும் ஜெயலலிதா குறித்து பதிவிட்டு குஷ்பு அஞ்சலி செலுத்தியுள்ளார்.