அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் விஜய் சேதுபதி ஷாருக்கான் குறித்து பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


ஜவான்


அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படூகோன்,யோகி பாபு, சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கி அனிருத் இசையமைத்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


ஜவான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று செப்டம்பர் 15ஆம் தேதி ஜவான் படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்சியில் ஷாருக் கான், அட்லீ, விஜய் சேதுபதி, தீபிகா கலந்துகொண்டார்கள்.  நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஷாருக் கான் குறித்து பேசியது அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.


விஜய் சேதுபதி


 “ஜவான் திரைப்படம் இந்தி மொழியில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு மிகப்பெரியக் காரணம் ஷாருக் கான் தான். மக்கள் அவரை நேசிக்கிறார்கள். தான் செல்லும் இடத்தில் எல்லாம் ரசிகர்களை தன் பக்கம் அவர் இழுக்கிறார். அவரை திரையில் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.


மக்களை அவர் கையாளும் விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது சிந்தனையே கவர்ச்சியானது. கவர்ச்சியாக இருப்பதாலேயே அது வசீகரிக்கிறது. அவர் பேசுவதைப் பார்ப்பதற்காக மட்டுமே நான் அவரது நேர்காணல்களை எடுத்து பார்ப்பேன்“ என்று விஜய் சேதுபதி பேசினார். இதனைத் தொடர்ந்து தான் முதல் முதலில் ஷாருக் கானை சந்தித்த தருணத்தை நினைவுகூர்ந்தார் விஜய் சேதுபதி.






 நினைச்சு கூட பார்க்கல


”2013 ஆம் ஆண்டு ஒருமுறை ஷாருக் கான் சென்னை வந்திருந்தார். அப்போது நான் பீட்சா படத்தில் நடித்திருந்தேன். என்னுடைய நண்பர் என்னை அவரிடன் அறிமுகப்படுத்தினார். நான் அவருடன் கை குலுக்கினேன், அப்போது நான் இதையெல்லாம்  நினைத்துகூட பார்க்கவில்லை. இதற்கு அடுத்து நான் அவரை மெல்பர்னில் சந்தித்தேன்.


சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நாங்கள் மெல்பர்ன் சென்றிருந்தோம். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஷாருக் கான் இன்னும் வரவில்லை என்று பதற்றமாக இருந்தார்கள். ஷாருக் என்றவுடன் நாங்கள் எல்லாரும் அவர் எப்படியும் தாமதமாக தான் வருவார் என்று காத்திருக்கத் தொடங்கினோம்.


சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்த ஷாருக் கான் வந்தார். அவர் தாமதமாக வந்த எந்த கோபமும் இல்லாமல் அவரை வரவேற்றார்கள். தனது பேச்சை அவர் தொடங்கிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. மக்களை எளிதாக கையாளக் கூடியவர் அவர்“ என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.