தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கியதன் மூலமே முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எந்த அந்தஸ்திற்கு முன்னேறியவர் இயக்குனர் அட்லீ. நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவின் ஸ்ட்ராங்கான ஒரு இடத்தை தக்க வைத்து கொண்ட பிறகு தற்போது பாலிவுட் பக்கம் தனது அடையாளத்தை நிரூபிக்க திசையை திரும்பியுள்ளார். 

Continues below advertisement


 



பாலிவுட்டில் நுழைந்த உடனேயே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை தான் முதலில் இயக்குகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கிறது. 







அந்த வகையில் நடிகர் ஷாருக்கான் இயக்குனர் அட்லீயை பற்றியும் அவரது மனைவி ப்ரியாவை பற்றியும் ட்விட்டரில் புகழ்ந்து ட்வீட் ஒன்று செய்து இருந்தார். "அட்லீ ஒரு மாஸ் இயக்குனர் மற்றும்  கடுமையான உழைப்பாளி. அவரது மனைவியோ மிகவும் அன்பானவர் என ட்வீட் ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார்.


அந்த ட்வீட்டுக்கு இயக்குனர் அட்லீ தனது நன்றியை தெரிவித்து நடிகரை புகழ்ந்துள்ளார். "சார் லவ் யூ சார்! கடின உழைப்பு என்றால் அதில் ராஜா நீங்கள் தான் சார். பார்வையாளர்களையும் ரசிகர்களையும் நீங்கள் அதிகமாக மதிக்கிறீர்கள். எனவே ஒவ்வொரு படத்திலும் நீங்கள் உழைக்கும் உழைப்பு ஈடு இணையற்றது. அதை அருகில் இருந்து பார்த்ததில் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். பதான் படத்தை பார்க்க என்னால் காத்திருக்க முடியாது" என்ற ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார் இயக்குனர் அட்லீ.  


நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. 'முதல் நாள் அவருடன் நடிக்கும் போது மிகவும் பதற்றமாக உணர்ந்தேன். ஆனால் அவர் என்னை மிகவும் அன்பாக நடத்தினர்' என விஜய் சேதுபதி பாலிவுட் பாட்ஷா உடன் அவருக்கு இருந்த அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்தார்.  






ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் அமோகமான வரவேற்புடன் ஜனவரி 25ம் தேதி வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'பதான்'.