காஃபி வித் கரண்
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி காஃபி வித் கரண். பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கரண் ஜோகரின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளிப்பார்கள். மேலும் பலவிதமான சர்ச்சைக்குரிய உண்மைகள் இந்த நிகழ்ச்சியில் வெளிவருகின்றன. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் 8ஆவது சீசன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் முதல் விருந்தினர்களாக பாலிவுட் தம்பதியினர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் தீபிகா மற்றும் ரன்வீர் ஆகிய இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோடுகளில் கலந்துகொண்ட நடிகை நடிகைகள் பலவிதமான சுவாரஸ்யமான உரையாடல்களில் கலந்துகொண்டார்கள்.
ஸ்ரீதேவியின் இரு மகள்கள்
2024ஆம் ஆண்டு தொடக்கமாக இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களான ஜான்வி கபூர் (Janhvi Kapoor) மற்றும் குஷி கபூர் (Kushi Kapoor) ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள். ஸ்ரீதேவியின் மகள் என்கிற அடையாளத்தால் சிறிய வயதிலேயே அதிக ஊடக கவனம் பெற்றவர்களாக இருவரும் இருந்து வருகிறார்கள்.
மேலும் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாக இருந்த சமயத்தில் அவரது அம்மா ஸ்ரீதேவி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஜான்வி மற்று குஷி கபூர் தங்கள் இருவருக்கும் இடையில் அக்கா தங்கைக்கான உறவு, தங்களது காதல் பற்றிய பல்வேறு விஷயங்களை பேசினார்கள். விளையாட்டுத்தனமாக ஜான்வி கபூர் தனது காதலன் ஷிகர் பஹாரியாவின் பெயரை எடுத்து மாட்டிக் கொண்டார். இது தவிர்த்து ஜான்வி கபூர் தனது அம்மா ஸ்ரீதேவி பற்றி பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சில நேரங்களில் அவர் எனக்கு குழந்தை மாதிரி
ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வி கபூரைப் பற்றி கூறியிருந்ததை கரண் ஜோகர் குறிப்பிட்டார் “ சினிமாவில் ஜான்விக்கு நிறைய பக்கபலங்கள் இருக்கின்றன. ஜான்வி எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர், மிக இளகிய மனம் கொண்டவர். ஆனால் அவரைவிட இளையவளான குஷி கபூர் ஜான்விக்கு மூத்த சகோதரியைப் போல் நடந்துகொள்வார்.” என்று ஸ்ரீதேவி முன்பு ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், "எனக்கும் என் அம்மாவுக்கும் இடையில் விஷயங்கள் மாறியிருக்கின்றன. என்னுடைய அம்மா இறந்தபின் சில நேரங்களில் குஷி எனக்கு தாயாகவும் மகளாகவும் சில நேரங்களில் நான் அவருக்கு தாயாகவும் மகளாகவும் இருந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.