தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக முனுமுனுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று நடிகர் சூர்யா. அவரது தம்பி கார்த்தியின் பருத்திவீரன் படம் குறித்த உரையாடல் தற்போது ஓய்ந்துள்ள நிலையில் சூர்யா குறித்தும் அவரது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகள் குறித்தும் தகவல்கள் வெளிவந்து கொண்டு உள்ளது. இது சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவாவின் கனவுத் திரைப்படமான கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதால் சூர்யாவின் போர்ஷன் முழுவதுமாக முடிந்துவிட்டதாம். கங்குவா படத்தின் சூட்டிங் பெரும்பாலும் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கோவா, சென்னை, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சூட்டிங் நடைபெற்றுள்ளது. 


இந்த படத்திற்குப் பின்னர் நடிகர் சூர்யா இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகவுள்ள புறநானூறு படத்தில் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் சூரறைப் போற்று படத்தில் இணைந்து பணியாற்றினர். கொரோனா கால கட்டத்தில் இந்த படம் வெளியானதால், படத்தினை திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை. சூரறைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், புறநாறு படம் திரையரங்கில் வெளியாகும் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது படம் குறித்த முதல் அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் மத்தியில் எகிறிவிட்டது. 


இதற்கு முன்னர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறனுடன் இணைந்து வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதால் சூர்யா தனது வீட்டில் ஜல்லிக்கட்டிற்கு ஏதுவாக ஒரு மாட்டினை வளர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் வெற்றி மாறனின் விடுதலை 1, விடுதலை 2 பாகங்களை படமாக்கவும் சூர்யாவின் மற்ற படங்களை முடிக்கவும் எடுத்துக்கொள்ளும் காலத்தில் சூர்யாவின் வீட்டில் உள்ள மாடு படப்பிடிப்புக்கு ஏற்றபடி நன்கு வளர்ந்து விடும் என்பதால் இந்த படத்திற்கான ப்ரீ புரோடக்‌ஷன் வேலை என்பது மிகவும் சுவாரஸ்யத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 


சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் சூர்யா கல்லூரிப் பருவ கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதால் சூர்யா இதற்காக கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றாராம். இதனால் அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ள புறநானூறு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்ளப்போவதில்லையாம். இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, அதிதி ஷங்கர் ஆகியோர் இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், துல்கர் உள்ளிட்டவர்களின் போர்ஷன்களை முதலில் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். 


இதனிடையே இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த படத்திற்குப் பின்னர் சூர்யா ஹிந்தியில் மகாபாரதத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒன்றான கர்ணனின் வாழ்க்கையை மையப்படுத்திய வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார்.