90களில் வெளியான திரைப்படங்களில் பல படங்கள், மக்களை குலுங்க குலுங்க சிரித்து மகிழ்வித்த திரைப்படங்கள். அந்த வரிசையில், இயக்குனர் சுந்தர் சி படங்கள், குடும்பம் குடும்பமாக படையெடுத்து பார்த்து மகிழ்ந்த திரைப்படங்கள் தான். ஒரு குடும்பத்தையே வைத்து ஒரு கலகலப்பான படத்தை எடுக்க திட்டமிட்டார் சுந்தர் சி. அப்படி உருவானது தான் ஜானகி ராமன். 



தீவிர அனுமன் பக்தரான ஆர்.சுந்தர்ராஜன், தன் அண்ணன் மகன்களான கவுண்டமணி மற்றும் சரத்குமாரை தீவிர அனுமன் பக்தர்களாக வளர்ப்பார். பெண் வாசம் இல்லாமல் சுத்தமான ஆன்மிகவாதியாக அவர்களை வளர்க்க வேண்டும் என்பதே அவரது ஆசை. ஆனால், கவுண்டமணி, சரத்குமார் இருவருக்குமே இல்லறத்தில் விருப்பம். அதிலும் சரத்குமார் ஒரு கட்டத்தில் நக்மாவை திருமணம் செய்து கொள்ள, திடீரென எண்ட்ரி ஆகும் ரம்பா, தானும் சரத்குமாரின் மனைவி தான் என கூறி, குடும்பத்தில் ஏகத்திற்கு பிரச்னை.



இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சித்தப்பாவுக்கு தெரியாமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து, குழந்தையும் பெற்று தன் அறையில் அவர்களை மறைத்து வைத்திருப்பார் கவுண்டமணி. இதெல்லாம் ஒரு கட்டத்தில் தெரியவர, அதை எப்படி அனுகினார் ஆர்.சுந்தர்ராஜ்? ரம்பா எண்ட்ரியால் சரத்குமார்-நக்மா வாழ்க்கையில் என்ன நடந்தது? அறையில் மறைத்து வைத்திருந்த தன் மனைவியையும் மகனையும் பாதுகாத்தாரா கவுண்டமணி? என பல்வேறு கேள்விகளுக்கு கலகலப்பாக திரைக்கதை எழுதியிருப்பார் சுந்தர் சி.


90களில் ஊர் திருவிழாக்கள், இல்ல நிகழ்ச்சிகளில் டிவி மூலம் திரைப்படம் திரையிடப்படும் முறை இருந்தது. அந்த காலகட்டத்தில் கட்டாயம் ஜானகிராமன் திரைப்படத்தை பலரும் திரையிடுவார்கள். அந்த அளவிற்கு இல்ல நிகழ்ச்சிகளில் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் படமாக ஜானகிராமன் படம் பார்க்கப்பட்டது. சிற்பியின் இசையில் பாடல்கள் அனைத்துமே மிக அருமையாக இருக்கும். ஒரே நேரத்தில் நக்மா, ரம்பா இரு கனவுக்கன்னிகள் நடித்ததால் இளசுகள் கூட்டம் அலை மோதியது. 



100 நாட்களை கடந்து ஓடிய ஜானகி ராமன், குறைந்த பட்ஜெட்டில் எடுத்து நிறைவான லாபத்தை பெற்ற திரைப்படம். அதுமட்டுமின்றி, சுந்தர் சி இயக்க வரலாற்றில் முக்கியமான படமாகவும் ஜானகிராமன் உள்ளது. 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜானகிராமன் திரைப்படம், இதே நாளில் 1997 அக்டோபர் 31 ல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண