பிம்பிசாரா... பெயரே டெரராக இருக்கிறது அல்லவா... படமும் அப்படி தான். படம் ஆரம்பிக்கும் போதே, கிரடிட் கார்டில், நன்றி ராஜமெளலி என பெயர் போடப்பட்டது. ஆனால், அது ஏன் என, படம் தொடங்கிய சிலநிமிடங்களிலேயே தெரிந்து விடும்.
கிட்டத்தட்ட பாகுபலி ஃபார்மட்டில் பயணிக்கிறது கதை. ட்ரிக்கர்தல சாம்ராஜ்யத்தில் மகா மன்னன் பிம்பிசாரர். ஆட்சியை விரிவு படுத்துவது மட்டுமே அவன் எண்ணம். அதற்காக எதையும் செய்வான். தன் ஆட்சிக்கு கீழ் உள்ளவர்கள் தனக்கு கட்டுப்பட்டு, தன்னை பார்த்து பயந்து நடுங்கி வாழ வேண்டும் என்பது அவன் எண்ணம். அப்படி தான் ஆட்சியும் நடக்கிறது. இரட்டையர்களாக பிறந்த அவன், தன் ஆட்சிக்கு பங்கம் வந்து விடக்கூடாது என தன் தம்பியை கொலை ஆணையிடுகிறான். அவன் இறந்ததாகவும் ஆட்சியை நடத்துகிறான்.
இதற்கிடையில், தன்னிடம் காயம் பட்ட எதிரிகளுக்கு தன் ஆட்சிக்கு உட்பட்ட தன்வந்திரிபுரம் மக்கள் சிகிச்சை அளித்ததை அறிந்து அங்கு வரும் பிம்பிசாரன், அங்கிருக்கும் அனைவரையும் கொலை செய்கிறான். அப்போது, அவர்கள் பாதுகாக்க நினைக்கும் தன்வந்திரி புத்தகத்தை கைப்பற்றி, தன் செல்வங்களை பதுக்கி வைத்திருக்கும் ரகசிய அறையில் வைக்கிறான்.
இதற்கிடையில், இறந்ததாக எண்ணப்படும் பிம்பிசாரனின் தம்பி, உயிர் பிழைத்து, ஒரு பூதத்திடம் இருந்து மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக பெறுகிறான். எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் அந்த கண்ணாடியை அரண்மனைக்கு எடுத்து வந்து, தன் அண்ணன் பிம்பிசாரனை எதிர்காலமான தற்போதைய காலகட்டத்திற்கு அனுப்பிவிடுகிறான். 5ம் நூற்றாண்டில் இருந்து 21ம் நூற்றாண்டிற்கு வந்த பிம்பிசாரன், உடை, நடை என அனைத்திலும் மக்களிடம் இருந்து வேற்றுமையை உணர்கிறான். இதற்கிடையில் பிம்பிசாரனின் பொக்கிஷத்தில் உள்ள தன்வந்திரி புத்தகத்தை அபகரிக்க தலைமுறைகளாக காத்திருக்கும் மருத்துவர் ஒருவர், பிம்பிசாரனை வைத்தே அதை திறக்க முடியும் என்பதால் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
கலியுகத்தில் சிக்கிய பிம்பிசாரன் என்ன ஆனார்? ட்ரிக்கர்தல சாம்ராஜ்யம் என்ன ஆனது? தன்வந்திரி புத்தகத்தை கெட்ட எண்ணம் கொண்ட மருத்துவர் அபரித்தாரா? என்பது தான் கதை. ‛வந்துட்டான்... வந்துட்டான்... வந்துட்டான்...’ என்பது மாதிரியான வழக்கமான தெலுங்கு பில்டப் உடன் தான் படம் முழுக்க பயணப்படுகிறார் பிம்பிசாரராக நடிக்கும் நந்தமுரி கல்யாண்ராம். அவர் ஜூனியர் என்.டி.ஆர்.,யின் தம்பி என்பது கூடுதல் தகவல்.
‛அவர் அப்படிப்பட்டவர்... இப்படிபட்டவர்... பயங்கரமானாவர்... படுபயங்கரமானவர்...’ என டயலாக்குகளை அடுக்கி அடுக்கியே கல்யாண்ராமை தூக்கி நிறுத்த பார்த்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட பாகுபலி பிரபாஸை தான் இமிடேட் செய்திருக்கிறார் கல்யாண். ஆனால், என்ன செய்ய பிரபாஸ் மாதிரி உடல் கட்டு இல்லையே. குறைந்த உயரம், மெலிந்த உடல் என ஆஜானுபாகுவிற்கு தேவையான முக்கியமான இரு மைனஸ்களோடு அதை கடக்க வேண்டியிருக்கிறது.
இருந்தாலும், குளோஸ்அப் காட்சிகளை வைத்தே படம் முழுக்க பில்டப் ஏற்றிவிட்டனர். லாங் ஷாட் மாளிகை, டைட் ஷாட் கோபம் என எல்லாமே பாகுபலி காஃபி! அதை உறுதி செய்வதற்காக பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணியின் பின்னணி வேறு. மனிதர், பாகுபலி, ஆர்ஆர்ஆர் போல, பாடல்களையும், பின்னணியையும் தூவி விட்டு ஒரு வடிவேலு ஊத்தப்பத்தை உருட்டி எடுத்திருக்கிறார். வழக்கமாக காலத்தை பின்நோக்கிச் செல்லும் கதைகள் தான் அதிகம் வரும், இவர்கள் முன்நோக்கிச் செல்ல வைத்திருக்கிறார்கள்; அந்த வகையில் ஆறுதல். தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்திய வரை இயக்குனர் மல்லிடி வசிஸ்தா ஜெயித்துவிட்டார்.
5ம் நூற்றாண்டையும், தற்போதைய காலத்தையும் வேறுபடுத்தி காட்டிய வகையில் ஜோடா கே.நாயுடு ஒளிப்பதிவு சிறப்பு. கேத்ரினா தெரிசா, சம்யுக்தா மேனன் இவர்கள் எல்லாம் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு காதலாக வருகிறார்கள். அப்புறம் இருக்கும் இடம் தெரியாமல் போகிறார்கள். அதே போல தான் பிரகாஷ் ராஜூம். பிம்பிசாரரின் வாரிசுகள் என வரும் குடும்பம், க்ளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் பயன்படுகிறது. குழந்தைகளோடு ஜாலியாக லாஜிக் இல்லாமல் பார்த்து ரசிக்க, பிம்பிசாரா சரியான தேர்வாக தான் இருக்கும். Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 65 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தெலுங்கில் தயாரான திரைப்படம், தற்போது தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.