போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில் மீதான தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்க உள்ளது.

திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் 2018ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து விலகி கடந்த அதிமுக ஆட்சியில் திமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்தவுடன் இவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அரவக்குறிச்சி தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் 23 மே 2019 அன்று எம்.எல்.ஏ.வாக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் ஐந்தாவது முறையாக கரூர் சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, திமுக  அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.


முன்னதாக இவர் கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, மற்றும் அவர் நண்பர்கள் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். அவை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று வழக்குகளை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் இந்த வழக்கில் ஆஜாரானார். அப்போது அவர் "அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க நபராக உள்ளார். ஏற்கனவே அவர் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல இளைஞர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, கோடிக்கணக்கில் பணம் வசூலித்து அப்பட்டமான மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீதும், அவரது நண்பர்கள் மீதும் இருக்கும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவர் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது" என்று வாதிட்டார்.


 அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று (31 அக்டோபர்-திங்கட்கிழமை) வழங்குவதாக உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார். இன்று தீர்ப்பு வழங்கப்படும் இந்த மோசடி வழக்கின் தீர்ப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சாதகமாக வருமா இல்லை பாதகமாக வருமா என காத்திருக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.