அவதார் நாயகனையும் கவர்ந்த ஆர்.ஆர்.ஆர்.. மகிழ்ச்சியில் ராஜமௌலி! கோல்டன் க்ளோப் விருது, ஆஸ்கார் பரிந்துரை என உலக அரங்கில் ஆர்.ஆர்.ஆர் படம் தொடர்ந்து கவனமீர்த்து வருகிறது.


இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம், கடந்தாண்டு மார்ச் 22 ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் கீரவாணி இசையமைத்திருந்தார். 


சென்ற ஆண்டு ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது முதல் உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நிகழ்த்தியது.


தொடர்ந்து சென்ற வாரம் நடைபெற்ற கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடலுக்கான விருதை வென்று கவனமீர்த்தது.


இந்த வரிசையில் இன்று நடைபெற்ற க்ரிட்டிக் சாய்ஸ் விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த பாடல் என இரண்டு விருதுகளை ஆர்.ஆர்.ஆர் படம் வென்றுள்ளது.


இந்நிலையில் இந்த விருது விழாவில் தன் ஆஸ்தான இயக்குநரும், டைட்டானிக், அவதார் ஆகிய பிரம்மாண்ட படங்களை இயக்கியவருமான ஜேம்ஸ் காமரூனை சந்தித்தது குறித்து ராஜமௌலி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.


"ஜேம்ஸ் காமரூன் ஆர்.ஆர்.ஆர் படத்தை ரசித்துப் பார்த்ததுடன் தன் மனைவி சூஸிக்கும் பரிந்துரை செய்து அவருடன் மீண்டும் இணைந்து பார்த்துள்ளார்.


எங்கள் படத்தைப் பற்றிப் பேச நீங்கள்  10 நிமிடங்கள் முழுமையாக செலவு செய்தீர்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் மிதந்து கொண்டிருக்கிறேன், இருவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.


 






ராஜமௌலியில் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.


இதேபோல் முன்னதாக ஹாலிவுட்டின் மற்றொரு ஜாம்பவான் இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் உடன் ராஜமௌலி பகிர்ந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.