இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டித்தொடரை கைப்பற்றியதுடன் ஒருநாள் போட்டித்தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது. குறிப்பாக, நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் விராட்கோலியின் அதிரடியான 166 ரன்கள் மூலம் விராட்கோலி மட்டுமின்றி இந்திய அணியும் மாபெரும் சாதனைகளை படைத்துள்ளது.




சுப்மன்கில்லின் 116 ரன்கள், விராட்கோலியின் 166 ரன்கள் உதவியுடன் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை குவித்தது. இதையடுத்து, 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தனர். இதனால், அந்த அணி 22 ஓவர்களிலே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் மலைக்க வைக்கும் வெற்றியை பெற்றது.


இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டியில் புதிய வரலாறு படைத்துள்ளது. அதாவது, ஒருநாள் போட்டியிலே அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற இமாலய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு நியூசிலாந்து அணி வசமிருந்த சாதனையை இந்திய அணி நேற்று முறியடித்தது. அதுமட்டுமில்லாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலே 300 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே அணி இந்தியா என்ற சாதனையையும் தற்போது இந்தியா தன்வசம் வைத்துள்ளது.


அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்



  • இந்தியா – 317 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி ( இலங்கைக்கு எதிராக)

  • நியூசிலாந்து – 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ( அயர்லாந்துக்கு எதிராக)

  • ஆஸ்திரேலியா – 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி(ஆப்கானிஸ்தானுக்கு எதிராக)

  • தென்னாப்பிரிக்கா – 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (ஜிம்பாப்வேவிற்கு எதிராக)

  • தென்னாப்பிரிக்கா – 258 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (பெர்முடாவிற்கு எதிராக)


பழிதீர்த்த இந்தியா:




இந்திய அணி 5 முறை 200 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 2000ம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா 245 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததே இந்தியாவின் மோசமான தோல்வியாக இருந்தது.  அந்த தோல்விக்கு இந்தியா 23 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்துள்ளது.


ஷார்ஜாவில் நடைபெற்ற அந்த போட்டியில் 300 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியை 245 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. நேற்று இலங்கை அணியை இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பழிதீர்த்துள்ளது.