நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ஆக்ஸ்ட் 6-ம் தேதிக்குள் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்தப் பகுதியில் செப்டம்பர் 15- தேதிக்கு மேல் விவசாயம் செய்யக்கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தக்கூடாதும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகளின் சென்டிமெண்ட்டை நாம் மதிக்க வேண்டும் என சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். வேலி அமைக்காத என்.எல்.சி., இழப்பீடு பெற்ற நிலத்தில் விவசாயம் செய்த விவசாயி என இரு தரப்பிலும் தவறு உள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 


கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் அழிக்கப்பட்டன. சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு என்.எல்.சி. தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. பயிர் சாகுபடி செய்யும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று கூறி விவசாயி முருகன் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு  இன்று (02/08/2023) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதி 'இதில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்க என்எல்சி தவறிவிட்டது, அதுபோல அந்த நிலத்தில் விவசாயிகள் பயிரிட்டதும் தவறு. சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 என விவசாயிகளுக்கு வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் என்.எல்.சி. இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அறுவடை முடிந்து நிலத்தை என்.எல்.சி.க்கு ஒப்படைக்க வேண்டும், அதன் பிறகு அந்த நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது. என்.எல்.சி.யும் நிலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார். இழப்பீடு வழங்க என்.எல்.சி. நிறுவனம் ஒப்புக்கொண்டதுடன் விவசாயிகள் சிறப்பு தாசில்தார் அலுவலகத்தில் இழப்பீடு தொகை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தது.