ஜெயிலர்
அண்ணாத்த படத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்டுத்த அப்டேட்கள்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு, சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதம் படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக்கும், ரஜினியின் பிறந்தநாளன்று டிசம்பர் 12 ஆம் தேதி, படத்தில் இடம்பெற்றுள்ள அவரின் கேரக்டரான ‘முத்துவேல் பாண்டியன்’ தோற்றமும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கண் கவர்ந்த காவாலா
இதனிடையே ரிலீசுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்து ஜெயிலர் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. அதில் முதல் அப்டேட்டாக கடந்த ஜூலை 6 ஆம் தேதி “காவாலா” பாடல் வெளியானது. பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியிருந்தார். தமிழ், தெலுங்கு கலந்து எழுதப்பட்ட இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
உங்கொப்பன் விசில கேட்டவன்
இப்படியான நிலையில், ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக ‘ஹூக்கும்’ ஜூலை 17ஆம் தேதி வெளியாகினது. முன்னதாக கடந்த ஜூலை 15 ஆம் தேதி இந்த பாடலின் முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் ரஜினியின் பன்ச் வசனங்கள் இடம் பெற்று ரசிகர்களை எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில்,
உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..
பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..
முதலிய வரிகள் ரஜினியின் இத்தனை ஆண்டுகால கெத்தை காட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், வெளியானதில் இருந்து தற்போது வரை மொத்தம் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இந்தப் பாடல்.
வழிமறிக்கும் கமல் ரசிகர்கள் கமல் ரசிகர்கள்
இதற்கிடையில் கமல் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆக்ரோஷமாக கிளம்பியிருக்கிறார்கள். விக்ரம் படத்தில் இடபெற்ற ’பத்தல பத்தல’ பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 11 மில்லியன் பார்வையாளர்களை தொட்டது, ஆனால் ஹுகும் பாடல் வெளியான 3 நாட்களுக்குப் பிறகே 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த இரண்டு பாடல்களுக்குமே அனிருத் இசையமைத்துள்ள நிலையில், ரஜினி - கமல் ரசிகர்கள் இணையத்தில் புள்ளி விவரங்களுடன் களமாடி வருகின்றனர்.