நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், மலையாளத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷனும் விறுவிறுப்பாக நடந்த நிலையில் முன்னதாக பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய சாதனை படைத்த ஜெயிலர் படத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பெரும் எதிர்பார்ப்புடன் காண ஆவலாக இருக்கும் நிலையில், கேரளா திரையுலகில் இருந்து முதன்முதலாக எதிர்ப்பு கிளம்பியது.
கேரளாவின் ‘ஜெயிலர்’
காரணம் கேரளாவில், ‘ஜெயிலர்’ என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. சக்கிர் மடத்தில் இயக்கியுள்ள இப்படமானது 1957 காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் ஒருவரை கொல்லத் துடிக்கும் கிரிமினல்களைப் பற்றிய கதை எனவும் கூறப்படுகிறது. இதில் முதன்மை கேரக்டரில் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன் தியான் சீனிவாசன் நடித்துள்ளார். இந்த படமும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது.
முன்னதாக ரஜினி படம் ஜெயிலர் என்ற பெயரில் வெளியானால் தங்கள் படம் பாதிக்கப்படும் என்பதால்,ஜெயிலர் படத்தின் டைட்டிலை கேரளாவில் மட்டும் மாற்ற வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீடு, மகள்களின் நகைகளை அடமானம் வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஜினி இந்த விவகாரத்தில் உதவ வேண்டும் எனவும் சாக்கிர் மடத்தில் கூறியிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி ஜெயிலர் படம், அதே டைட்டிலில் தான் கேரளாவில் வெளியாகவுள்ளது.
ரிலீஸ் தேதி மாற்றம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு கேரளாவில் அதிகளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து எர்ணாகுளத்தில் உள்ள கேரள பிலிம் சேம்பர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் சாக்கிர் மடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் தனது எதிர்ப்புகளுக்கு கேரள திரையுலகமும் கைகொடுக்காததால் மலையாள ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பதிலாக 18 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Jailer: ’ஜெயிலர் வெற்றி பெற்றால் காரணம் விஜய் தான்’ ..கொளுத்திப்போட்ட பிரவீன் காந்தி.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்..