மாரடைப்பால் சிகிச்சைப் பெற்று வந்த மலையாள இயக்குநர் சித்திக் மரணமடைந்த நிலையில், ரசிகர்களின் அவரின் படைப்புகள் குறித்து சிலாகித்து வருகின்றனர். 


பிரபல இயக்குனர் சித்திக்:


மலையாளத் திரையுலகினருக்கு சித்திக் பெயரை சொன்னால் அவ்வளவு பரீட்சையம். கிட்டதட்ட 1989 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தொடந்து நடிகராக இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் சுபாஷ், ஜனா, ரங்கூன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வைகை எக்ஸ்பிரஸ், வெந்து தணிந்தது காடு, வரலாறு முக்கியம்  படங்களில் நடித்துள்ளார். 


ஆனாலும் சித்திக்  இயக்கிய தமிழ் படங்களை சொன்னால், அச்சச்சோ அவரா என ஃபீல் பண்ணும் அளவுக்கு தனது படங்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, ராதாரவி, வடிவேலு, சார்லி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் மூலம் தான் அவர் இயக்குநராக தமிழில் அறிமுகமானார். அந்த படம் சித்திக் மலையாளத்தில் இயக்கிய ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ரீமேக் தான்.






நேசமணி காமெடி:


ஆனாலும், படத்தில் இடம் பெற்ற ‘காண்டிராக்டர்’ நேசமணி அண்ட் கோ -வின் காமெடி காட்சிகள், நமக்கு ‘ரணகளத்திலும் ஒரு கிலுகிலுப்பு’ என்பதை போல எப்போது பார்த்தாலும் வெடித்து சிரிக்க வைக்கும். அந்த அளவுக்கு ஒரிஜினல் படத்தை விட,  விஜய், ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி என பலரும் அசத்தியிருப்பார்கள். இதனைத் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து ‘எங்கள் அண்ணா’ படத்தை இயக்கினார் சித்திக். 


இந்த படத்திலும் வடிவேலு, பிரபுதேவா, பாண்டியராஜன், நமீதா, எம்.எஸ்.பாஸ்கர் என காமெடிக்கு பஞ்சமில்லாமல் முழுக்க முழுக்க ரசிக்கும்படி கதையை நகர்த்தியிருப்பார். குறிப்பாக வடிவேலு கல்லை கொண்டு எறிந்து தயிர் விற்பவரின் பானையை உடைத்து அவருக்கு நிவாரணத்தொகை வழங்கும் காட்சியை பார்த்தால் நம்மை மறந்து சிரிப்போம். தொடர்ந்து பிரசன்னாவை வைத்து சாது மிரண்டா படத்தை இயக்கினார். 


ரசிகர்களை சிரிப்பால் சிறையெடுத்தவர்:


இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சார்லி, வையாபுரி உள்ளிட்டவர்களின் காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தது. இந்த நிலையில் மீண்டும் விஜய்யை வைத்து ‘காவலன்’ படத்தை எடுத்தார். இதில் வடிவேலுவின் காமெடிகள் அலப்பறை காட்டியது. பிரைவேட் நம்பரை ‘பார்வதி நம்பியார்’ என படிப்பது, நாய்க்கு பந்தை எடுக்க 2 ஆண்டுகள் ட்ரெயினிங் கொடுப்பது, நடுநடுவே விஜய்க்கு கவுண்டர் கொடுப்பது என இந்த படம் கலகலப்பாக நகரும். இப்படியெல்லாம் தனது படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என நினைத்தவர் இன்று இல்லை என்பது ரசிகர்களுக்கு நிச்சயம் வலியை தரும். ஆனால் அவரின் படைப்புகள் மூலம் சிரிக்கும் மக்களின் மனதில் ‘சித்திக்’ என்றும் மறையாமல் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.