நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை, மக்கள் எதிர்க்கவே இல்லை என கன்னட நடிகர் சிவராஜ் குமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே சில தினங்களுக்கு முன் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் தனது மனைவியுடன் சிவராஜ் குமார் பங்கேற்றிருந்தார். தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நடிகர் தனுஷை புகழ்ந்து தள்ளினார். மேலும் மேடையில் கேப்டன் மில்லர் படத்தில் இடம் பெற்ற கோரனார் பாடலுக்கு தனுஷூடன் சேர்ந்து நடனமாடினார். இந்த வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இன்றைய தினம் கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது. 


இதனைத் தொடர்ந்து சிவராஜ் குமார் பல சேனல்களுக்கு நேர்காணல் அளித்து வருகிறார். அந்த வகையில் ஒரு நேர்காணலில் நடிகர் விஜய்யுடனான நட்பு குறித்து பேசியுள்ளார். அதில் சிவராஜ் குமாரிடம், “ரஜினிகாந்துக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் அரசியலுக்கு வருகை என்ற பேச்சு வந்தது ஆனால் வரவில்லை. விஜயகாந்த் அரசியலுக்குள் இருந்தவர். விஜய்யுடன் உங்களுக்கு இருக்கும் நட்பு பற்றி சொல்லுங்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்கு, ”விஜய்யுடன் நல்ல நட்பு உள்ளது. என்னுடைய 100வது பட விழாவுக்கு விஜய், சூர்யா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவரின் எல்லா படமும் எனக்கு பிடிக்கும். அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது.  கடினமாக உழைக்கிறார்.அவர் ஒரே இரவில் பிரபலமானவராக மாறி விடவில்லை. சினிமாவில் தன்னை மெருகேற்றி கொள்ள நிறைய போராட்டங்களை எதிர்கொண்டார். தன்னுடைய ஸ்டைல், படங்கள் தேர்வு என எல்லாவற்றிலும் தன்னை மெருகேற்றி கொண்டார்.


விஜய் பள்ளி மாணவ, மாணவியருக்கு உதவிய வீடியோ எல்லாம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவர் அரசியலுக்கு வருவது நல்லதுதான். அந்த திறமை விஜய்யிடம் உள்ளது, அவர் தன்னை நம்புகிறார். அந்த நம்பிக்கை தான் மக்களுக்கு பிடித்துள்ளது. பொதுவாக ஒரு பிரபலம் நடிப்பில் இருந்து அரசியலுக்கு வந்தால் எதுக்கு அதெல்லாம் என கேட்பார்கள். ஆனால் விஜயின் அரசியல் வருகையை மக்கள் அப்படி சொல்லவில்லை. அவர்கள் அதை எதிர்க்கவில்லை” என சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.


இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.  ஏற்கனவே ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சிவராஜ் குமாருக்கு, அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




மேலும் படிக்க: Christian Oliver: ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி.. விமான விபத்தில் பிரபல நடிகர் இரு மகள்களுடன் உயிரிழப்பு