பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (Christian Oliver) விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது இரண்டு மகள்களுடன் கிழக்கு கரீபியனில் உள்ள பெக்கியாவிற்கு அருகில் உள்ள தனியார் தீவான பெட்டிட் நெவிஸ் தீவுக்கு புத்தாண்டு கொண்டாட சென்ற நிலையில் இந்த விமான விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் காவல்துறையினர் வெளியிட்ட தகவல்படி, ‘விமானம் செயின்ட் லூசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் விபத்தை சந்தித்தது’ என குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள மீனவர்கள் இந்த விபத்து பற்றி கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்த பிறகே இந்த விபத்து சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.
51 வயதான நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் உடன் அவரது இரு மகள்களான மடிதா க்ளெப்சர் (10) மற்றும் அன்னிக் கிளெப்சர் (12) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் பிறந்த கிறிஸ்டியன் ஆலிவர் 1990களில் ஒளிபரப்பான சேவ்ட் பை தி பெல்: தி நியூ கிளாஸ் தொடரின் இரண்டாம் சீசன் முழுவதும் பிரையன் கெல்லர் மாணவர் கேரக்டரில் நடித்திருந்தார். அவர் கோப்ரா 11 தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார் .இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் உலகப் போர் பற்றிய திரைப்படமான தி குட் ஜெர்மன், 2008 ஆம் ஆண்டு வெளியான ஸ்பீட் ரேசர், இந்தியானா ஜோன்ஸ், டயல் ஆஃப் டெஸ்டினி உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருந்தார்.
இதனிடையே புத்தாண்டு கொண்டாட பெட்டிட் நெவிஸ் தீவுக்கு சென்ற அவர் கடைசியாக புத்தாண்டு தினத்தன்று கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “அனைவருக்கும் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கட்டும்.அன்பு ஆட்சி செய்யட்டுட்டும்" என்று வாழ்த்தினார். புத்தாண்டு முடிந்து திரும்பும் போது நடந்த விமான விபத்தில் கிறிஸ்டியன் ஆலிவர், இரு மகள்களுடன் விமானி ராபர்ட் சாக்ஸும் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிறிஸ்டியன் ஆலிவர் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: MV Lila Norfolk: சோமாலியா கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்டது இந்தியா கடற்படை! 15 இந்தியர்கள் சேஃப்!