பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்ப்புகளையும் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. அதோடு இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.350 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் ரூ.178 கோடி வசூல்
ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10, வியாழன் அன்று உலகெங்கும் வெளியானது. மிக விரைவாக உலகளவில் ரூ.300 கோடி வசூலித்து சாதனை செய்திருந்த நிலையில், தற்போது ஐந்தே நாள் 350 கோடி ரூபாய் வசூல் செய்து வசூலில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது. Sacnilk.com இன் கூற்றுப்படி, 5வது நாளான திங்கட்கிழமை, இந்தியாவில் மட்டும் ஜெயிலர் 28 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம், ஜெயிலரின் தற்போதைய இந்திய வசூல் மட்டும், ரூ.178 கோடியாக உள்ளது.
உலகம் முழுவதும் 350 கோடி
இதற்கிடையில், திரைப்பட டிராக்கர் மனோபாலா விஜயபாலன், ஜெயிலர் உலகம் முழுவதும் ரூ.350 கோடியை கடந்துள்ளதாக கூறியுள்ளார். இரண்டு வருட இடைவெளிக்குப் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளியான படம் ஜெயிலர் ஆகும். அதனால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருந்தன. அவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இருந்தது குறி்பிடத்தக்கது.
பெரிய நட்சத்திரப் பட்டாளம்
ஜெயிலரில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகி பாபு, சிவ ராஜ்குமார், மோகன்லால், விநாயகன் மற்றும் ரெடிங் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன்னா தோன்றும் காவலா பாடல் படத்திற்கு கூடுதல் மைலேஜ் சேர்த்தது. படம் வெளியாகும் முன்பே அந்த நடனங்கள் ரீல்ஸ்களில் வைரல் ஆகி இருந்தது குறிபபிடத்தக்கது. அதோடு அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி ஹிட் அடித்திருந்தன.
ஏன் இந்த வரவேற்பு?
ஹுகும் பாடலில் வரும் வரிகள் யாரையோ மறைமுகமாக கூறுவது போல இருப்பதாக பல பேச்சுகள் எழ, படத்திற்கு இலவச புரொமோஷன்கள் எல்லா தரப்பில் இருந்தும் கிடைத்தன. இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் அசைக்க முடியாத பாக்ஸ் ஆபீஸ் ஓப்பனிங் பெற்றதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் தான். ஒவ்வொரு மொழியில் இருந்தும் அந்த மொழியின் பெரிய நடிகர்களுக்கு முக்கியமான கேமியோக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கு தகுந்தாற் போல் படத்தை விளம்பரம் செய்ததன் விளைவு, படத்தின் வசூலில் பிரதிபலித்து வருகிறது. படமும் எதிர்பார்த்த அளவுக்கு நிறைவாக இருந்ததால அடுத்தடுத்த ஷோக்கள் மளமளவென விற்றுத் தீர்ந்தன. அதன் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.