பட்டாம் பூச்சி படத்தில் சைக்கோ வில்லனாக நடிக்க ஜெய் மிகவும் சிரமப்பட்டதாக அந்தப் படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். 


பட்டாம் பூச்சி படத்தில் நடிகர் ஜெய் முதன் முறையாக வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்திற்கு அந்தப்படத்தின் இயக்குநர் பத்ரி அளித்துள்ள பேட்டியில், “ இந்தப்படத்தில் சுந்தர் சி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெய் மனநலம் பாதிக்கப்பட்ட வில்லனாக நடித்துள்ளார். 




படம் 80 களில் நடக்கிறது. இந்த விஷயம் சுவாரஸ்சியம் மிகுந்ததாக இருக்கும். சுந்தர் சியின் உயரமும், உடற்கட்டும்தான் அவரை இந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க என்னைத் தூண்டியது. படம் 80 களில் நடக்கிறது, அப்போது தற்போது உள்ளது போல டெக்னாலாஜி வசதிகளெல்லாம் கிடையாது. ஆதலால் அந்த போலீஸ் கதாபாத்திரம் தனது புத்திசாலித்தனத்தைக் கொண்டு அந்த வழக்கை அணுக வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார் சுந்தர் சி. 


எனக்கு கில்லர் முகஜாடை இல்லாத ஒருவர் தேவைப்பட்டார். ஜெய்யை அணுகினோம்.வில்லன் கதாபாத்திரத்தில்  நடிக்க முதலில் ஜெய் தயங்கினார். பிறகு சுந்தர் சி மேல் மரியாதை காரணமாக கதையைக் கேட்டார். கதையை கேட்டு முடித்த உடன் படத்தில் நடிப்பதாக ஒத்துக்கொண்டார். 




படப்பிடிப்பின் போது ஜெய் ஒரு விஷயத்தை பகிர்ந்தார். சுப்ரமணியபுரம்  ‘கண்கள் இரண்டால்’ பாடல் படப்பிடிப்பின் போது தொடர்ந்து தலையை அசைத்துக்கொண்டே இருந்ததால், தனக்கு கடுமையான கழுத்து வலி ஏற்பட்டதாக கூறினார். அது வெறும் 4, 5 நாட்கள் நடந்த படப்பிடிப்புதான். ஆனால் இந்தப்படத்தில் ஜெய் கதாபாத்திரம் தொடர்ந்து தலையையும் உடலையும் அசைத்துக் கொண்டே இருப்பது போன்று காட்சிகள் உள்ளது. அப்படியென்றால் ஜெய் எவ்வளவு வலியை கடந்து வருவார் என்று கற்பனை செய்து பாருங்கள். 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என்று பேசியுள்ளார். இந்தப் படத்தில் பிரேம் கலை இயக்குநராகவும், கிச்சா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். 


முன்னதாக பகவதி படம் மூலமாக திரையுலத்திற்கு அறிமுகமான நடிகர் ஜெய் பின்னர் வெங்கர் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து இவர் நடித்த சுப்ரமணிய புரம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜெய் கலகலப்பு 2 படம் மூலமாக இயக்குநர் சுந்தர் சி உடன் இணைந்தார். இந்த நிலையில்தான் இயக்குநர் பத்ரி இயக்கும் சுந்தர் சியும் ஜெய்யும் இணைந்துள்ளனர். சுந்தர் சி முன்னதாக இயக்குநர் பத்ரி இயக்கிய நாங்க ரொம்ப பிஸி படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படம் கன்னட படமான மாயா பஜார் படத்தின் ரீமேக் ஆகும்.