சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு எழுந்துள்ள நிலையில், அந்த படத்தில் கொடூரமான போலீஸ் எஸ்.ஐ குருமூர்த்தியாக வந்து, ராசுகண்ணு, மொசக்குட்டி, இருட்டப்பனை போட்டு வெளுவெளுவென வெளுத்தெடுத்த, ­இயக்குநர் தமிழை, தமிழ் கூறும் நல்லுலகு கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இதுவே தன் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி, அங்கீகாரம் என மகிழ்கிறார் அவர்.


விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களில் இயக்குநர் வெற்றிமாறனோடு பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழை, ஜெய்பீம் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகம் செய்து அவரது நடிப்பிற்கு ஜெயம் போட்டிருக்கிறார் இயக்குநர் ஞானவேல்.  அசுரன் படத்தின் இடைவேளை சண்டைக்காட்சியில் தனுஷூடன் சண்டையிடும் நபர்களில் ஒருவராக திரையில் தோன்றிய தமிழ், தற்போது ஜெய்பீம் படம் பார்த்த அத்தனை பேர் மனதையும் ஒரு கொடூர போலீசாக ஆக்கிரமித்திருக்கிறார்.


படம் வெற்றி பெற்றிருக்கும் வேளையில் எஸ்.ஐ.குருமூர்த்தியான தமிழிடம் பேசினோம் :-



எஸ்.ஐ. குருமூர்த்தியான ‘தமிழ்’



  • ஜெய் பீம் படத்தில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி..?


நான் இயக்கிய ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும், ஜெய்பீம் படத்தின் இயக்குநரும் உறவினர்கள். என்னை பற்றி இயக்குநர் ஞானவேலிடம் அவர் சொல்லியிருக்கிறார். இருவரும் இந்த மாதிரி ஒரு போலீஸ் வேடத்திற்கு நான் சரியாக இருப்பேன் என நினைத்து, அதில் திருப்தியடைந்த இயக்குநர் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்தார்.



  • சூர்யா-வுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது ? அவர் உங்களை பற்றி என்ன சொன்னார்..?


சூர்யாவுடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. அவங்க கம்பேனியில ஏற்கனவே நான் ‘டாணாக்காரன்’ படம் பண்ணியிருந்ததுனால ஏற்கனவே எங்களுக்குள் அறிமுகம் இருந்தது. ஜெய் பீம் படத்தில் அவர் நடித்த காட்சிகளை பார்ப்பதற்கு முன்னதாகவே நான் நடித்த காட்சிகளை பார்த்துவிட்டு, ரொம்ப பிரமாதமா இருக்கு, அற்புதமா நடிச்சுருக்கீங்க அப்டின்னு பாராட்டுனாரு. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.



  • உண்மையிலேயே நீங்கள் போலீசாக பணியாற்றியவர். ஏன் அந்த பணியை விட்டுவிட்டு வந்தீர்கள்?


நான் சென்னையில 10 வருஷம் போலீசா இருந்தேன். எனக்கு சினிமான்னா பெரிய விருப்பம், ஈர்ப்பு. அதனாலதான் போலீஸ் வேலையை உதறிதள்ளிட்டு, எனக்கு புடிச்ச சினிமாவுகுள்ள ரத்தமும் சதையுமா நுழைந்தேன்.



  • சரி, அது இருக்கட்டும் ராசுகண்ணாவை போட்டு படத்துல அந்த அடி அடிச்சீங்களே, அந்த கோபம் உண்மையான போலீசா இருந்ததுனால வந்த கோபமா ?


சிரிக்கிறார். அய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லீங்க. டைரக்டர் அப்படி நடிக்க சொன்னாரு, அதனால் அந்த மாதிரி நடிச்சு காட்டுனேன் அவ்ளோதான்.மத்தபடி நான் ரொம்ப நல்லவன்.




  • உங்க வீட்ல எல்லாம் படம் பாத்தாங்களா ? என்ன சொன்னாங்க?


ஆமா, எல்லோரும் பார்த்தாங்க. என் மனைவிதான் என்னங்க இவ்ளோ பயங்கரமான ஆளா படத்துல இருக்கீங்களேன்னு சொல்லிட்டு பயந்துட்டாங்க. இதுக்கு அப்பறமாவது இந்த மாதிரி கேரக்டர் இல்லாம பாத்துக்குங்குங்களேன்னு கேட்டுகிட்டாங்க. படம்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்மான்னு சொல்லி சமாளிக்க வேண்டியதாயிற்று.



  • நீங்க எப்படி உண்மையிலேயே ரொம்ப கோபமான ஆளா..?


அதெல்லாம் ஒன்னுமில்லீங்க, என்னோட நெருங்கி பழகுனவங்களுக்கு தெரியும். ஒருத்தர்கிட்ட கூட நான் கோபப்பட மாட்டேன். பாக்கத்தான் கொஞ்ச கரடு முரடா டெடர் பீசா இருப்பேன் ; மத்தப்படி நான் ரொம்ப சாஃப்டான ஆளுங்க. மொத்தம் 50 நாள் எனக்கு ஷூட்டிங் இருந்தது. அதுல ஒருத்தர்கிட்ட கூட நான் கோபப்பட்டு பேசினது இல்லன்னா பாத்துக்குங்களேன்.



  • நடைமுறையில் போலீஸ்காரங்க எப்படி இருக்கனும்னு நெனக்கிறீங்க..?


யோசிக்கிறார்... மொதல்ல நல்லவங்களா இருக்கனும். இன்னும் சரியா சொல்லனும்னா படத்துல வர்ற அண்ணன் பிரகாஷ்ராஜ் கேரக்டர் மாதிரி ஒவ்வொரு போலீசும் இருந்துட்டா மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை ;  வரவும் வராது.



  • மூத்த நடிகராக இருக்கக் கூடிய பிரகாஷ் ராஜ் கூட நடிச்சுருக்கீங்க. அவர் உங்கள பத்தி என்ன சொன்னாரு..?


ஷூட்டிங் ஸ்பாட்ல பெரிசா பேசிக்க டைம் கிடைக்கல. சமீபத்துல விடுதலை படத்துக்காக சந்தித்தபோது, உன்னோட நடிப்பெல்லாம் ஸ்கிர்ன் ல பாத்தேன் டா தம்பி, ரொம்ப நல்லா பண்ணிருக்க, தமிழ் சினிமாவுல உனக்கு பெரிய இடம் இருக்குன்னு சொன்னாரு. அந்த நிமிடம் எனக்கு பல விருதுகள் கிடைத்தது மாதிரி இருந்தது என்றார்.