Jai Bhim Climax Song | ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற பாடலின் பின்னணியில் குழந்தை ஒன்று மற்றொரு குழந்தையை கட்டியணைக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெய்பீம் படத்தில் இறுதியாக செங்கேணிக்கு நீதிமன்றத்தில் நியாயம் வாங்கிக்கொடுப்பார் சூர்யா. உடனே செங்கேணி நெகிழ்ந்து போய் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுவார். இந்தக் காட்சி நகர நகர பின்னணியில் ‘மண்ணிலே ஈரம் உண்டு’ பாடல் ஒலிக்கும். நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் அடங்கிய இந்தப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ளார்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். படம் வெளியான நாள் முதலே இந்தப் பாடல் எல்லோருக்கும் பிடித்தமான பாடலாக மாறிவிட்டது. அன்றிலிருந்தே சமூக வலைதளங்களில் உலா வந்துக் கொண்டிருந்த இந்தப் பாடல் தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோவாக மாறியுள்ளது.
விழா ஒன்றில், குழந்தை ஒன்று அங்கு பலூன் விற்றுக்கொண்டிருந்த ஒருவரின் குழந்தையை தன்னுடன் ஆடும் படி அடம் பிடிக்க, அந்தக் குழந்தை மெதுவாக முன்வந்து அதனை கட்டியணைக்க முன் வருகிறது. நீண்ட அழுக்கு பனியனை அந்தக் குழந்தை அணிந்திருந்த போதும், இன்னொரு குழந்தை அதனை சற்றும் பொருட்படுத்தாமல்அந்தக் குழந்தையை கட்டியணைத்துக் கொள்கிறது. இதன் பின்னணியில் ‘மண்ணிலே ஈரம் உண்டு’ பாடல் ஒலிக்கிறது. பார்த்த உடனே மனதை நெகிழ செய்துள்ள இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. குறிப்பாக வன்னியர் சமூகத்தினர் படத்தில் தங்கள் சமுதாயம் குறித்த தவறான தகவல் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து படத்தின் சில காட்சிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டன.
இருப்பினும், சூர்யா தங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நஷ்ட ஈடாக 5 கோடி தரவேண்டும் என்றும் பா.ம.க சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான் பா.ரஞ்சித், வெற்றிமாறன், கருணாஸ் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெய்பீம் படத்தின் மண்ணிலே ஈரம் உண்டு பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.