டெக்னாலஜி வளர்ந்த பிறகு ஆன்லைன் டேட்டிங் என்பது பூதாகரம் ஆகிவிட்டது. அதுவும் இந்த கொரோனா லாக்டவுனில் அதன் வீச்சு உச்சத்திற்கு சென்றுள்ளது. நம் இளைஞர்கள் பலர் அதனை வெகுவாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலும் புழங்கும் ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது. ஆனால் அதோடு சேர்ந்து அதில் இருக்கும் ஆபத்துகளும் அதிகரித்து தான் வந்துள்ளன. ஆன்லைன் டேட்டிங் மூலம் பணம் பறிக்க உலக அளவில் பல சைபர் க்ரைம் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் பலர் பணத்தை இழந்து வாடுகின்றனர். அப்படி ஒரு விஷயம் தான் மும்பையில் ஒரு 76 வயது முதியவருக்கு நடந்துள்ளது. 76 வயது முதியவர், ஆன்லைனில் நட்பாக பழகிய வெளிநாட்டு பெண் ஒருவரால் ரூ.4.8 லட்சம் மோசடி செய்யப்பட்டார்.



குற்றம் சாட்டப்பட்டவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் எடித் என்றும் தெரியவந்துள்ளது, மேலும் ஆன்லைன் டேட்டிங் இணையதளத்தில் இருந்து அவரது எண்ணைப் பெற்றதாகவும் அதன்மூலம் அவரிடம் பேசி பழகியதாகவும் புகார் தந்த 74 வயது முதியவர் கூறியுள்ளார். நிறைய நாட்கள் பேசி பழகிய பிறகு அவள் மிகவும் நம்பிக்கையானவள் என்று தோன்றிய பிறகு, அவர் இந்தியாவிற்கு வந்திருப்பதாக பொய் சொல்லி இருக்கிறார், மேலும் விமான நிலையத்தில் ஏதோ காரணங்களால் தான் கைது செய்யப்பட்டு விட்டதாகக் கூறினார், இதன் மூலம் தன்னை விடுவிக்க அந்த நபரை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தூண்டியுள்ளார். அதன் அடிப்படையில் மொத்தமாக 4.8 லட்சம் பணத்தை முதியவர் அவர் சொன்ன வங்கி கணக்குகளில் செலுத்தியிருக்கிறார்.



அம்பர்நாத் காவல்துறையின் கூற்றுப்படி, புகார் அளித்தவர் கோஹஜ்கானில் வசிப்பவர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அந்தப் பெண் இந்த முதியவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். மே 24 அன்று, அந்த நபரின் ஆவணங்களில் சில சிக்கல்கள் காரணமாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவரை விடுப்பதற்காக பணம் செலுத்திவிட்டு, அந்த முதியவர் விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்திருக்கிறார், ஆனால் அவர் வரவில்லை. விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் பெண்ணை விடுவிப்பதற்காக முதியவர் பணம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவருக்கு அழைப்புகள் வந்த அனைத்து எண்களுக்கும் திரும்பவும் அழைக்க முயன்றிருக்கிறார், ஆனால் அவை எல்லாம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. இரு தினம் முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்த முதியவரின் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மோசடி மற்றும் பொதுவான நோக்கம் கொண்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது.