ஜகமே தந்திரம் பார்த்தவர்கள் அதிலுள்ள பல்வேறு வியப்புகளிலிருந்து இன்னும் விடுபட்டிருக்க மாட்டீர்கள். அதில் ஒன்று, சுருளி சாப்பாடு கிளப். ‛இயக்குனர்கள் கற்பனைக்கே அளவில்லையா... சாப்பாடு கிளப்பாம்... இதுக்கெல்லாமா கிளப் இருக்கும்...’ என சிலர் நினைத்திருக்க கூடும். சுருளி கதாபாத்திரத்தில் வரும் தனுஷ் நடத்தும் ஓட்டல் பெயர் தான், சுருளி சாப்பாடு கிளப். கிளப் என்றாலே, கூத்து, கும்மாளம் இருக்கும் இடம் என்று தான் நமக்கு தோன்றும். படத்தில் ஹீரோ வேற ரவுடி. அப்போ, நம்ம கெஸ் சரி தான் என நீங்கள் நினைத்திருந்தால் அதை அப்படியே அழித்து விடுங்கள். கிளப் என்பது அசைவ உணவங்களை குறிக்கும் சொல். இன்றல்ல, 50 ஆண்டுகளுக்கு முன். ஆனால் இன்றும் அதே பெயரில் மதுரையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஜெயவிலாஸ் சாப்பாடு கிளப் தான், படத்திற்காக சுருளி கிளப்பாக காட்டப்பட்டுள்ளது. ‛இன்றும் சாப்பாடு கிளப் இருக்கிறதா...’ என, புருவத்தை உயர்த்தினால், இந்த தகவல் முழுதும் உங்களுக்கானது தான்.
50களில் கொடி கட்டி பறந்த சாப்பாடு ‛கிளப்’கள்!
இப்போதுள்ள உணவு விடுதிகளில் சாப்பாடு, வாயில் நுழைகிறதோ இல்லையோ... பெயர் வாயில் நுழைவது அவ்வளவு சிரமம். ஆனால் 50களில் எல்லாம் சாப்பாடு கடைகளில் எளிதில் அடையாளம் காண முடியும். அசைவம் என்றால், அது சாப்பாடு கிளப் என இருக்கும். சைவம் என்றால் ‛கபே’ என்று இருக்கும். ஆண் பாவம் படத்தில் ஜனகராஜ் வைத்திருப்பாரே ‛ஜனகராஜ் கபே’ அது தான் சைவ உணவகம். ஆனால் துரதிஷ்டவசமாக, சாப்பாடு கிளப்புகளை பற்றிய காட்சிகளை தமிழ் சினிமா நம் கண்ணில் காட்டவில்லை போலும். 70 ஆண்டுகளில் இப்போது தான், ஜகமே தந்திரம் மூலம் சாப்பாடு கிளப் பற்றிய விபரம் வந்திருக்கிறது. 90 கிட்ஸ்களை புரட்டி எடுக்கிறீர்களே... 50 கிட்ஸ்கள் இருந்தால் கேட்டு பாருங்கள். அவர்களுக்கு தெரியும் சாப்பாடு கிளப்புகளின் மகிமை.
‛சூடான’ சுருளி சாப்பாடு கிளப்!
ஸ்ரீ ஜெயவிலாஸ் சாப்பாடு கடைக்கு போனால் சுடச்சுட மிளகு சுக்கா, அயிரை மீன் குழம்பு, ஈரல் வறுவல் என மதுரைக்கே உண்டான தனித்துவமான உணவுகளை உண்ணலாம். கீழ ஆவணி மூல வீதியில், இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு தான் அந்த கடை இருக்கும், விளம்பர பலகை கூட, அந்த காலத்தில் வைக்கப்பட்டது தான். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் இருப்பதால், சுற்றுலா வரும் பயணிகள் இங்கு வந்து ஒரு கை பார்ப்பது வழக்கம். ஆனால் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் சாப்பிட்டு விட முடியாது. கூட்டம் அலை மோதும். காத்திருந்து தான் சாப்பிட வேண்டும். மிகச்சிறிய கட்டடம். அதற்குள் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்றால், அது தான் உண்மையில் ஆச்சரியமான விசயம். பைக் பார்க் செய்வதற்கே அங்கு இடம் போதாது. காருக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அந்த அளவிற்கு நெருக்கடியான பகுதியில் அமைந்துள்ளது ஜெயவிலாஸ் சாப்பாடு கிளப். அங்கு ஜகமே தந்திரம் சூட்டிங் நடந்து, சுருளி சாப்பாடு கிளப் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்து எடுத்திருக்கிறார்கள் என்றால், திறமை தான். ஜெயவிலாஸ் சாப்பாடு கிடைக்கு போனால், சுடச்சுட எல்லாம் கிடைக்கும். சுருளி சாப்பாடு கிளப்பிற்கு போனால், சுடச்சுட தோட்டாக்களும், நாட்டு வெடி குண்டுகளும் தான் கிடைக்கும்.
ஒரிஜினல் சாப்பாடு கிளப் உருவான கதை!
இன்றும் ஜெயவிலாஸ் சாப்பாடு கிளப்பிற்கு வருவோரில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம். அவர்கள் பெரும்பாலானோர் உள்ளூர் வாசிகள். அவர்களுக்கு தான் அந்த கடையின் மகிமை தெரியும். தவமணி விலாஸ் சாப்பாட்டு கிளப் என்கிற பிரபல அசைவ உணவகத்தில் பொறுப்பாளராக இருந்த பெருமாள் என்பவர் 1950ல் தொடங்கிய உணவகம் தான், ‛ஸ்ரீ ஜெயவிலாஸ் சாப்பாடு கிளப்’. இப்போது அவரது மகன் அய்யாக்கனி அதை நிர்வகித்து வருகிறார். மதுரையில் என்ன தான் நீங்கள் கடைக்கு பெயர் வைத்தாலும், மக்கள் அவர்களாக ஒரு பெயர் வைப்பார்கள். அப்படி தான், 50களிலேயே ஜெயவிலாஸ் கிளப்பிற்கு மக்கள் சூட்டிய பெயர் சந்து கிளப். இரு கட்டடங்களுக்கு இடையே சிறிய சந்தில் இருப்பதால் இந்த பெயர். இன்றும் உள்ளூர் வாசிகளுக்கு சந்து கிளப் தான் பேமஸ். 90 ரூபாய் அளவுச் சாப்பாடு, அதற்கு துணையாக கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, மட்டன் குழம்பு, கோழிக்குழம்பு, மோர், ஊறுகாய் என சகலமும் கிடைக்கும். இதெல்லாம் சும்மா ட்ரெய்லர்... இப்போது வருது பாருங்க.... இது தான் மெயின் பிக்சர். கோழிச்சுக்கா, அயிரை மீன், ஈரல் வறுவல், சிவகாசி சிக்கன், நாட்டுக்கோழி சாப்ஸ், விரால் ரோஸ்ட் என நடப்பது, பறப்பது, ஊர்வது என எல்லாமே கிடைக்கும். அதுவும் அசத்தும் ருசியில். ஜகமே தந்திரம் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், மதுரைக்காரர் தான். அவருக்கோ, அவர் அப்பாவுக்கோ கண்டிப்பா ஜெயவிலாஸ் சாப்பாடு கிளப் பத்தி தெரிஞ்சிருக்கும். அந்த பெயரை பார்த்த பிரமிப்பு தான், சுருளி சாப்பாடு கிளப் உருவாக காரணமா இருந்திருக்கும்.
இது மட்டும் தான் இடிக்குது!
கார்த்திக் சுப்பராஜ் தன்னோடு எல்லா படத்திலும் மதுரையின் ஏதாவது ஒரு அடையாளத்தை சொருகுவார். இந்த முறை ஜகமே தந்திரத்தில் ‛சுருளி சாப்பாடு கிளப்’ ஜெயவிலாஸ் சாப்பாடு கிளப்பிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. லண்டனில் சுருளி , கடை துவங்க காரணமே சுருளி சாப்பாடு கிளப் வைத்திருந்த அனுபவம் தான் என்பதால், ஜெயவிலாஸ் சாப்பாடு @ சுருளி சாப்பாடு கிளப் படத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. என்ன... மீனாட்சி அம்மன் கோயில் அருகில் இருப்பதால், அந்த ஏரியாவில் வெடி போடவே யோசிப்பார்கள். சுருளி... அசால்டா.. ஆபாயில் போடுவது போல நாட்டு வெடிகுண்டை ரெடி செய்து, கீழ ஆவணி மூல வீதியில் வீசுவது தான், கொஞ்சம் நெருடல். சரி, படத்துல இதெல்லாம் பாக்க முடியமான்னு கேட்டா... படம் தானே இன்று சகலமும் பேச வைக்கிறது. அதனால் அதை கடந்து செல்ல முடியவில்லை.