தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், தமிழக 16-வது சட்டமன்றத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது, இந்த கூட்டத்தில் காலை வணக்கம் என்று தமிழில் தனது பேச்சைத் தொடங்கிய ஆளுநர், மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு தனது உரையின் பல இடங்களில் புகழாரம் சூட்டினார்.


ஆளுநர் தனது உரையில், திராவிட இயக்கத்தின் மகத்தான தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரசு பதவியேற்றுள்ளது. இந்த மாமன்றத்தில் அறுபதாண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்ற தலைவராக அவர் திகழ்ந்தார். அவர் நம்முடன் இன்று இல்லை என்றாலம், அவருடைய கொள்கைகள் இந்த அரசை எப்போதும் வழிநடத்திச் செல்லும்.




மக்களாட்சி மாண்பின்மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைத் தொடர்ந்து பின்பற்றும் வகையில், ஓர் உண்மையான குடியரசின் உயிர்நாடியாக விளங்கும் நமது மக்களாட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகை உழவர் சந்தைகள் உருவாக்கப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதி 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி திருச்சி – கரூர் இடையே மாயனூரில் காவிரி நதியின் குறுக்கே கதவணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்திட்டத்தை விரைவாக செயல்படுத்திட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களின் கொள்முதல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கணிசமான அளவில் நிதி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.


முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ரூபாய் 70 கோடி செலவில் மதுரையில் சர்வதேசத் தரத்திலான நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் தலைமையில் குழு அளித்த பரிந்துரைகளின்படி, முன்னாள் முதல்வர் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகளை போன்றே சென்னை- கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும், சென்னை – பெங்களூர் தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.




2009-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது சென்னை மெட்ரோ ரயில் திட்டம்  தொடங்கப்பட்டது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். 2008ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கைகள் என்று முதன்முதலில் பெயரிட்டார். மேலும், அவர்களுக்கு நலவாரியம் அமைத்து நலத்திட்டங்களை செயல்படுத்தினார். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும்  மேம்படுத்த வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.


திராவிட சித்தாந்தத்தின் ஒப்பற்ற தலைவர், நவீன தமிழ்ச் சமுதாயத்தை செதுக்கிய சிற்பி, முத்தமிழறிஞர் கருணாநிதி வகுத்தளித்த பாதையில் தொடர்ந்து பீடு நடை போட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தலைநிமிர்ந்து நோக்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம்” என்று பேசினார்.