தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, கடந்த மே மாதம் 7-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரவை செயலாளர் அறிவித்தார். தற்போது, கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16-வது சட்டசபையின் முதல் பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து குறிப்பிட்டார். குறிப்பாக நீண்ட காலமாக கோரப்படும் தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என்ற குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு முக்கியமான தகவலை தெரிவித்தார். அவரது உரையில்,
''யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப உயிர்ப்புள்ள தமிழ்ச் சமூகத்தில் இணைந்திட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்களை இவ்வரசு வரவேற்கும். அதே நேரத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும், இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும், ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்'' என்றார்.
முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு பேரவைக்கு அழைத்து வந்தார்.அவருக்கு ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வணக்கம் தெரிவித்தனர். ஆளுநரும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.