தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கிய  ஜகமே தந்திரம் திரைப்படம் சமூக ஊடங்களில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. உதாரணமாக, ஜகமே தந்திரம் மிக மிக ஆபத்தான படம். முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட. ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பது போல பாசாங்கு செய்து அந்த மக்களுக்கு ஊறு விளைவிக்கிற அரசியல் பேசுகிறது. ஐரோப்பிய ஆஸ்திரேலியா கனடா மாதிரி நாடுகள் ஈழ அகதிகளை வெளியேற்ற இப்படம் உதவக்கூடும் போன்ற கருத்துக்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டு வருகின்றன. மறுபுறம்,  மேலவை நாடுகளில் தலையோங்கி நிற்கும் இனவாத அரசியல்  மற்றும் அகதிகளின் வாழ்க்கையை பதிவு செய்யும் சிறந்ததொரு முயற்சியென்று சிலர் பாராட்டுகின்றனர்.  

  


இருப்பினும், தமிழ் சினிமாவில் இத்திரைப்படம் உருவாக்கிய தாக்கத்தை விவாதிப்பதும் நல்லது. குறிப்பாக, தமிழ் சினிமாவின் அடிப்படையாக விளங்கும் 'Madurai Formula Films' என்ற சாதிய கோட்பாடு கதைக்களத்தை ஜகமே தந்திரம் திரைப்படம் மாற்றியமைக்க முயற்சித்திருக்கிறது என்பதையும் இங்கு வாதமாக கொள்ளலாம். திரைப்படத்தில் வரும் 'சுருளி' கதாப்பாத்திரம் தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிதல்ல. சேது, நந்தா, பருத்தீவீரன், சுப்ரமணியபுரம், தூங்காநகரம் போன்ற பல்வேறு திரைப்பட கதாநாயகர்களின் வரிசையில்தான் சுருளியும் உள்ளார். வன்முறை,சாதி கட்டமைப்பு,ஆண்மைத் தனம், குரூரம், நம்பிக்கைத் துரோகாம்,உடல்சுகம் போன்ற பண்புகள் இத்கைய கதாபாத்திரங்களின் அடிப்படை சாராம்சமாக உள்ளன.


தமிழ் சினிமாவின் மூன்றாவது அலை என்ற கோட்பாட்டை வரையறுத்த  பேராசிரியர் Dickens Leonard, சுப்ரமணியம் (அழகர், பரமர்), பருத்திவீரன் (வீரா, செவ்வாழை) கதாபாத்திரங்கள் குறித்து, "Conscripts of Cinema: The Dangerous and Deviant Third Wave" என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கியிருக்கிறார். 2000-க்குப் பின் வந்த உருவாக்கப்பட காதல், வெயில்,பருத்திவீரன், சுப்ரமணியபுரம் திரைப்படங்களில் சாதிமறுப்பு காதல் தோல்வியில் முடிவடைவதும், மோசமான முறையில் கதாநாயகன் மரணிப்பதும் மூலமாக மதுரை சினிமாக்கள் சாதி கட்டமைப்பை வலுப்படுத்துவதாக விளக்குகிறார். 




குறிப்பாக, காதல் படத்தில், "ஒடுக்கப்பட்டவகுப்பைச் சேர்ந்த கதாநாயகனும், நாயகியும் இறுதிவரை பாலுறவு கொள்ள வாய்ப்பு அளிக்கப்படாததன் மூலம், சாதி மறுப்பை காதலை மிக நுட்பமான முறையில் மதுரை சினிமாக்கள் எதிர்ப்பதாக ஸ்டாலின் ராஜாங்கம் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.  பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நவநாகரிக கலச்சாரங்களை பின்பற்றுபவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். 'அமெரிக்க மாப்பிளை' என்பது இன்றளவும் புழக்கத்தில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து சரவணன், எம்.குமரன், கிங், நளதமயந்தி, தாம் தூம், திருட்டுப்பயலே போன்ற திரைப்படங்களில் வாய்ப்புக்காக  வெளிநாடு சென்ற கதாநாயகர்கள் இறுதியில் தமிழ்நாட்டிற்கே திரும்பியதாகவே காட்சிப்படுத்தப்படும். அயல்நாட்டு மக்களுக்கு பண்பாடுகளையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் முழுமையான மனிதர்களாகவே கதாநாயகர்கள் வடிவமைக்கப்பட்டனர். 


ஆனால், 'சுருளி' மொழி தெரியாத, கலச்சாரம் புரியாத அயல் நாட்டில் தான் தனது யார் என்பதை புரிந்து கொள்கிறான். மதுரையில், தனது திருமாங்கல்யாம்/தாம்பூலம் நிற்கப்படும்போது அலட்டிக்கொள்ளாமல் இருந்த அவன், இங்கிலாந்தில் ஈழத்தமிழ் பெண் மீது காதல் வயப்படுகிறான். அந்தக் காதல் அவருக்கு தற்காலிக அரசியலைக் கற்றுத் தருகிறது.   'நாட்டு எல்லையைத் தாண்டினா நம்ம மொத்த எல்லாரையும் கீழ்சாதியாத் தான் வெள்ளைக்காரான் பார்ப்பான்' என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் தருகிறார். சுருளி கதாபாத்திரம் கதை சொல்லி கிடையாது, Racist/Xenophobe ஈழப்போர் குறித்த கதைகளை புரிதல் கொள்ளக்கூடியவன். 




தமிழ் சினிமா தென் மாவட்டங்களை பிற்போக்குத்தனமான, வன்முறை நிலப்பரப்பாக சித்தரிப்பதாக ராஜன்குறை கிருஷ்ணன், ஆனந்த் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் எடுத்துரைக்கின்றனர். உதாரணமாக,  தேவர்மகன் போன்ற படங்களில் வெளிநாடுகளில்  இருந்து வரும் கதாநாயகன் உள்ளூர் சட்டஒழுங்கை பேணிக் காப்பதாகவே கட்சிகள் வடிவமைக்கப்படுகிறது.  


ஆனால், ஜகமே தந்திரம் படத்தின் மூலம், உள்ளூர் மட்டத்திலான சாதிய அரசியலில் இருந்து விலகி, உலக அரசியல் வரைபடத்தோடு மதுரை நிலப்பரப்பு  இணைக்கப்படிருக்கிறது. லண்டன் வீதிகளில் 'லிட்டில் மதுரை' சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் இறுதி காட்சிகளில், ஈரான்ம் இராக், ஆப்கானிஸ்தான் எல்லைகளில் நின்று கொண்டு " ஒட்டு மொத்த மனித அடையாளமும் பேப்பரில் சுருங்கிவிட்டது" போன்ற வசனங்கள் மதுரை சினிமாக்களை அடுத்தக்கட்ட இடத்திற்கு கொண்டு செல்கிறது. லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி "சுருளி" போன்ற சண்டியர்களை  கமல்ஹாசன் திருத்தும்போது, மதுரையில் இருந்து லண்டனுக்கு சென்று "அங்குள்ள இனவாதம் பிடித்த பீட்டரை" காவு வாங்க முடியும்  முடியும் என்ற சுருளியின் கதாபாத்திரம் கூடுதல் கவனமும், வரவேற்பும் பெறுகிறது. சுருங்க சொன்னால், "சுருளி" கதாபாத்திரம் மதுரை சினிமாக்களின் நேற்றைய தவறான புரிதல், நாளைய அரசியல் சொல்லாடல். 


     

                       


இத்திரைப்படம், ஈழத்தமிழ் அரசியல் மட்டுமல்ல, திராவிட அரசியலையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" உலக மாந்தர் யாவரும் எங்கள் உறவுகளே என்று பாடிய கணியன் பூங்குன்றனார் தமிழகத்தின் தென் மாவட்டத்தை சேர்ந்தவர். பொதுவாக, திராவிட அரசியல் என்பது நிலப்பரப்பு சார்ந்த இனவாத அரசியல் (Regional Chauvinism) என்றளவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், திராவிடம் என்பதே கற்பனையான அரசியல் எல்லை (Imagined Political Boundary). விளிம்பு நிலை மக்களுக்கான அடிப்படை அரசியல். திராவிட அரசியல் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அதை தமிழ்நாடு சரியாக புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டுவிட்டது. திராவிடம் என்பது ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு உணர்வு. ஒருவகையான அரசியல் செயல்முறை.   


கேரளா, கர்நாடாகா, உத்தரகாண்ட், அசாம் போன்ற மாநிலங்கள் தொடங்கி, லண்டனில் உள்ள இராக், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகளுக்கு திராவிட அரசியல் பொருந்தும். அதற்கான, ஒரு கற்பனை வரைபடமாகத் தான் 'சுருளி'கதாப்பாத்திரம் உள்ளது.    



   


பொதுவாக, ஒரு திரைக்கதை எந்தவொரு குறிப்பிட்ட தத்துவத்திற்குள்ளும் அகப்படாது. ஓவ்வொரு கதையும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கின்றன.  பொருளற்ற, உடலற்ற, உடையற்ற ஒரு உணர்வு தான் திரைப்படம் என்று கூறுவார்கள். சினிமா என்றைக்குமே தனக்கென்று ஒரு நிலையான பார்வையாளரை உறவாக்கி/உருவாக்கிக் கொண்டதில்லை. ஈழத்தமிழ் அரசியல், திராவிட அரசியல், தேசியவாத அரசியல், காலனித்துவ அரசியல், இஸ்லாம் வெறுப்பு அரசியல், இனவாத அரசியல், சாதிய அரசியல் போன்ற பல்வேறு கோணங்களில் ஜகமே தந்திரத்தின் கதைக்களம் ஆராயப்படுகிறது.