தமிழ் சினிமாவில் காதல் படங்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை. தமிழில் காதல் படங்கள் வரிசையாக வெளிவந்தாலும், படத்தின் தலைப்பிலேயே ‘காதல்’ எனும் வார்த்தை வந்தது அரிதாகத்தான் இருந்தது. 90-களின் மத்தியில் காதல் என்ற வார்த்தையை படத் தலைப்பாக வைத்து வெளிவந்த படம் தான் 'காதல் கோட்டை' இந்தப் படம் வெளியான முதல் நாள் ஹீரோவும், ஹீரோயினும் பாத்துக்கவே மாட்டாங்களாம். பாக்காமலேயே காதலாம், படம் நல்லாருக்கும்னு எனக்குத் தோணலை என்று பலர் விமர்சனம் செய்தனர். அது எப்படி பார்க்காமலேயே காதலிப்பது என்றும் கிண்டலும் கூட அடித்தார்கள்.
சிலர் படம் ஓடவே ஓடாது பாரேன்’ என்றார்கள். ஆனால் அப்படி பேசியவர்கள் அனைவரும் இது போன்று ஒரு படம் இனி வராது என்று சொலும் அளவிற்கு காதல் கோட்டையை கொண்டாடித் தீர்த்தனர். பார்க்காமலேயே காதல் செய்வது என்ற கற்பனைக்கும் எட்டாததொரு காதலை மிகவும் இயல்பாகவும், நம்பும்படியாகவும் சொன்னதில்தான் இருக்கிறது ‘காதல் கோட்டை’ படத்தின் சாதனை வெற்றி.
சிவசக்தி மூவி மேக்கர்ஸ் என்கிற தயாரிப்புக் கம்பெனி, பிரபலம் அடைந்தது ‘காதல் கோட்டை’ படத்துக்குப் பிறகுதான். தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் என்கிற பெயர், திரையுலக வட்டாரத்திலும் பத்திரிகை உலகிலும் சினிமா ரசிகர்களுக்கு நடுவேயும் உச்சரிக்கப்பட்டது இந்தப் படத்துக்குப் பின்னர்தான். இன்றைக்கு புதிய படங்களை இயக்காவிட்டாலும் கூட, இயக்குநர் அகத்தியனைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கும் ‘காதல் கோட்டை’தான் காரணம். குறிப்பாக தமிழ் சினிமாவில் காதல் படம் என்றால் அது ’இதயம்’ என்ற நிலையில் இருந்த போது காதல் கோட்டையும் அதை ஆக்கிரமித்துக்கொண்டது. தேவயானியை வைத்து படம் எடுத்தால் அந்த படம் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையை விதைத்ததும் இதே காதல் கோட்டைதான்.
இசையமைப்பாளர் தேவாவை இன்னொரு கட்டத்துக்கு அழைத்துச் சென்ற விதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது இந்த ‘காதல் கோட்டை படம். எல்லாவற்றுக்கும் மேலாக, தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிற அஜித்துக்கு ஆசைக்குப் பிறகு பிரமாண்ட வெற்றியைக் கொடுத்து, வருக்கென தனிக் கோட்டையை கட்டிக்கொடுத்ததும் இந்த ’காதல் கோட்டை’தான்.
காதல் கோட்டையின் ஒவ்வொரு பாடல்களையும் தமிழ்நாட்டு இளைஞர்கள் காதலின் தேசியக் கீதமாகவே ஆக்கிக்கொண்டனர். காலமெல்லாம் காதல் வாழ்க, கவலைப்படாதே சகோதரா, நலம் நலம் அறிய ஆவல், சிவப்பு லோலாக்கு குளுங்குது குளுங்குது பாடல்கள் எல்லாம் எக்கச்சக்க ஹிட். இப்படி காதலர்களால், காதலித்தவர்களால், காதலிக்க நினைப்பவர்களால், காதலிக்க முடியாமல் போனவர்களால் இன்றைக்கும் என்றைக்கும் காதல் கோட்டை கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கும்..!
படத்தின் கதை :-
ஊட்டிதான் நாயகியின் ஊர். அக்கா, மாமாவுடன் இருக்கிறார். வேலை தேடுவதுதான் வேலை. சென்னையில் இருந்து ஊட்டி செல்லும் ரயிலில் நாயகி. அப்போது அவளின் சர்டிபிகேட் கொண்ட பை திருட்டுப் போகிறது. அனாதையான நாயகனுக்கு சென்னை தான் சொந்த ஊர். சென்னையில் இருந்து ஜெய்ப்பூருக்கு வேலைக்காக ரயிலேறுகிறான். அப்போது, நாயகியின் சர்டிபிகேட் பை, அவனிடம் கிடைக்கிறது. ஜெய்ப்பூருக்குச் சென்றதும் சர்டிபிகேட்டில் உள்ள ஊட்டி முகவரிக்கு சர்டிபிக்கேட்டை அனுப்பிவைக்க, அதில் நெகிழ்ந்து போன நாயகி நன்றிக் கடிதம் போடுகிறாள். இப்படியாகவே கடித்தொடர்பு மூலம் வளரும் நட்பு, ஒருகட்டத்தில் காதலாகிறது. ஜெய்ப்பூரில் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள பெண் காதலிக்கிறாள். அதைப் புறக்கணிக்கிறான் நாயகன். அதேபோல், வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியம்மாவும் காதலைச் சொல்லுகிறாள். அதையும் புறக்கணிக்கிறான்.இந்த சமயத்தில், தபால்துறை ஸ்டிரைக்கால், கடிதப்போக்குவரத்து தடைப்படுகிறது. அருகில் உள்ள எஸ்.டி.டி. பூத் நம்பரில் பேசுவதற்கும் வழியில்லாமல் போகிறது. பார்க்காமலேயே காதலிக்கும் விஷயத்தை அக்காவிடம் சொல்ல, அக்கா தன் கணவரிடம் சொல்ல, அவளைக் கண்டிக்கிறார்கள். அதேசமயம் நல்ல பணக்கார மாப்பிள்ளையையும் பார்க்கிறார்கள். அதேபோல் நாயகனும் ஜெய்ப்பூரில் முதலாளியம்மாவின் டார்ச்சரால், வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்துவிடுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில், ஆட்டோ டிரைவர் நண்பனாகிறார். ஆட்டோ ஓட்டும் வேலையில் ஈடுபடுகிறார் நாயகன்..
காதலனைத் தேடி சென்னைக்கு வருகிறார். கொட்டி கொண்டிருக்கிறது மழை. அப்போது, நாயகனின் ஆட்டோவில் ஏறும் நிலை ஏற்படுகிறது. நாயகனின் ஆட்டோவில் சவாரி செய்தபடி, நாயகனைத் தேடி அலைகிறாள் நாயகி. ஒவ்வொரு இடமாகச் சென்று, தோல்வியாகவே இருக்க, கடைசியாக, ஊருக்குச் செல்ல ரயிலேறுகிறாள். நாயகனும் க அவளை ரயிலேற்றிவிடுகிறான். அப்போது இருவரும் யார் யார் என அறிந்தார்களா, இல்லையா என ஒரு மிக பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பார் இயக்குநர் அகத்தியன். பின்பு இருவரும் சேரும் காட்சி மிக ஆழமான காதலை வெளிபடுத்தி காட்சிகளை இயக்குனர் அமைத்து இருப்பார். படத்தின் நடுவே மணிவண்ணனின் நடிப்புமும் மிக அழகாக அமைந்து இருக்கும்.
தேவாவின் இசையில் எல்லாப்பாடல்களும் தேவாமிர்தம். டைட்டில் பாடலும் , ‘வெள்ளரிக்கா ‘சிவப்பு லோலாக்கு’, ‘நலம் நலமறிய ஆவல்’, கவலைப்படாதே சகோதரா’ என்று அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்து ரசிகர்களை மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் அழ்த்தியது. தங்கர்பச்சானின் ஒளிப்பதிவு அனைத்து படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது.
அஜித்தைக் கொண்டு அகத்தியன் எழுப்பியதுதான் ‘காதல் கோட்டை . திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் 100,200 நாட்கள் என ஓடியது. மிகப்பெரிய வசூலைக்குவித்தது. தேசிய விருது பெற்றார் அகத்தியன். முக்கியமாக, டிரெண்ட் செட்டர் படமானது. இந்த படத்திற்கு பிறகு வந்த அனைத்து படங்களும் காதல் வார்த்தை சேர்க்காமல், கதையில் புதிதுபுதிதாகக் காதல் சொல்லப்பட்ட படங்கள் வந்தன. இவை அனைத்தும் அகத்தியன் எனும் படைப்பாளிக்குக் கிடைத்த வெற்றி.
இளைஞர்களை மத்தியில் காதலைப் பற்றியும், பார்க்காமல் காதல் கடிதத்தின் மூலம் காதல் என காதலின் உணர்வுகளை புரிய வைத்த ஒரு படம் என்றால் அது காதல் கோட்டை என்று சொன்னால் மிகையாகாது. அனைத்து இளைஞர் மனதிலும் காதலை கோட்டையாக கட்டிய நாள் இன்று. காதல் கோட்டை படம் வெளியான நாள். 1996ம் ஆண்டு, ஜூலை 12ம் தேதி வெளியானது ‘காதல் கோட்டை’. இன்றுடன் படம் வெளியாகி 25 ஆண்டுகளாகின்றன. இன்னும் எத்தனை காதல் படங்கள் வந்தாலும் எப்போதும் அசைக்க முடியாத கோட்டையாக ‘காதல் கோட்டை’ இருக்கும்.