அனைத்து சமூகத்தினரையும் ஒன்று சேர்த்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க போராட உள்ளதாக கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.


தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை கொங்குநாடு என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து கொங்குநாடு பிரிவினைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொங்குநாடு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




இது தொடர்பாக கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கூட சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அவை அப்பகுதிகளின் வளர்ச்சிக்காக பிரிக்கப்பட்டுள்ளன.  கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்கள் கொங்கு மண்டலத்தில் உள்ளன. தமிழ்நாட்டின் 66 சதவிகித வருமானம் கொங்கு நாட்டின் 11 மாவட்டங்களில் இருந்து அரசுக்கு செல்கிறது. அந்த வருவாயை பெற்றுக் கொண்டு கொங்கு பகுதிகளுக்கு அரசு எதுவும் செய்யப்படவில்லை. கொங்குப் பகுதி வறட்சி பகுதி. அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. வளர்ந்து வரும் கொங்குப் பகுதியில் தொழில்கள் மேம்பட உரிய வசதிகள் செய்யவில்லை. கொங்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் போதிய சாலை வசதிகள் இல்லை. கொங்கு பகுதி மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவது இல்லை. கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கொங்கு மண்டலம் வளர்ச்சி அடைய வேண்டும். கொங்கு நாடு முன்னேற வேண்டும். என்பதே எங்களது நோக்கம். எனவே கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும். கொங்குநாடு தனி யூனியன் பிரதேசம் கேட்கவில்லை. கொங்குநாட்டிற்கு தனி மாநில அந்தஸ்து தான் வேண்டும்.


கொங்கு நாடு தனி மாநில கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு மனு அனுப்ப உள்ளோம். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததில் தங்களுக்கு உடன்பாடு இல்லை. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு தான் சரியாக இருக்கும். கொங்கு நாடு தனி மாநிலம் என்பது கவுண்டர் சமூகத்திற்கு மட்டுமானது என சிலர் நினைக்கின்றனர். ஆனால் கொங்கு நாடு என்பது கொங்கு மண்டலத்தில் வாழும் அனைத்து சமூகத்துக்குமானது. அனைத்து சமூகத்தையும் ஒன்று சேர்த்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க போராட உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.