காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்த தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளர் நதவ் லாபிட் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் கோவா திரைப்பட திருவிழா கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 நாட்கள் நடைபெற்ற கோவா திரைப்பட விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்பட்டது.
இந்த விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் திரையிடப்பட்ட நிலையில் எந்த விருதையும் பெறவில்லை. இதனிடையே விழாவில் கடைசி நாளில் பேசிய இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நதவ் லாபிட் பேச்சு கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
நிகழ்வில் பேசிய அவர், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம். இது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை. இந்த படத்தை பார்த்த நாங்கள் அனைவரும் கலக்கமடைந்தோம், அதிர்ச்சியடைந்தோம். இந்த விழாவில் நாங்கள் உணர்ந்த உணர்வு கலைக்கும், வாழ்க்கைக்கும் இன்றியமையாத ஒரு விமர்சன விவாதத்தையும் உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம் என கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
இவ்வளவு ஏன் நடாவ் லேபிட் பேச்சிற்கு இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் முதலில் கண்டனம் தெரிவித்தும் பிறகு மன்னிப்பு கேட்டும் இருந்தார். அதேசமயம் காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, நடிகர் அனுபம்கெர் இதற்கு எதிராக கொந்தளித்தனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய நதவ் லாபிட், நான் யாரையும் அவமதிக்க விரும்பவில்லை. என் நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களையோ அல்லது அவர்களது உறவினர்களையோ அவமதிப்பதும் இல்லை. என்னுடைய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் என்ன சொன்னாலும் காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு மோசமான பிரச்சார திரைப்படமாகும். ஒரு மதிப்புமிக்க போட்டிப் பிரிவுக்கு இப்படம் பொருத்தமற்றது. நான் எனது கருத்தை சக ஜூரி உறுப்பினர்களின் பிரதிபலிப்பாகவே பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.