இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படும் குழந்தைகளுக்கு எதிரான பதிவுகள் இதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.


ஆபாச கணக்குகள்:


இதற்கு மத்தியில், உலகின் முதன்மை பணக்காரர் எலான் மஸ்க் ட்விட்டரை சமீபத்தில் வாங்கினார். இதை தொடர்ந்து, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 25 வரையில், இந்தியாவில் மட்டும் குழந்தைகள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதை ஊக்கப்படுத்தியும், கட்டாயப்படுத்தி நிர்வாண படங்களை எடுத்தும் அதை வெளியிட்ட 44,611 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 25 வரையிலான காலக்கட்டத்தில் இதுபோன்ற 52,141 கணக்குகளுக்கு ட்விட்டர் தடை விதித்தது. மேலும் இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறி 4,014 கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளது.


குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்:


குழந்தைகளை உள்ளடக்கிய ஆபாச படங்கள் ட்விட்டரில் வெளியிடப்படுவது குறித்து மஸ்க் கவலை தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, இம்மாதிரியான பதிவுகளை வெளியிட்டு குழந்தை கடத்தல் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ட்விட்டர் கணக்கை முடக்கியதற்காக மஸ்கை பிரபல போட்காஸ்டர் லிஸ் வீலர் பாராட்டினார்.


இருப்பினும், அவசர நிலைமையை கருத்தில் கொள்ளாமல் ட்விட்டர் இந்த விவகாரத்தில் மந்தமாக செயல்படுவதாக சிலர் விமர்சித்துள்ளனர். 


விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை


குழந்தை பாலியல் வன்கொடுமை புகார்களை கையாளும் ட்விட்டர் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்ததே இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 4.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் புகார்களை கையாளும் குழுவில் ஒருவரே உள்ளார்.


அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக ட்விட்டர் பயனர்களைக் கொண்ட இரண்டாவது நாடான ஜப்பான் உள்ளது. இம்மாதிரியான, மக்கள் தொகை அதிகமுள்ள பிராந்தியத்தில் குழந்தை பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு ஒருவரே இருப்பது பெரிய பிரச்னையாக உள்ளது.


ட்விட்டர் கணக்குகள் முடக்கம்:


ட்விட்டரில் வயது வந்தோருக்கான படங்களை பகிரலாம். ஆனால், குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் படங்களை பகிர அனுமதி இல்லை. இந்த விவகாரத்தில்,  வந்தோருக்கான படங்களில் இருந்து குழந்தை பாலியல் படங்களை வேறுபடுத்த பணியாளர்களின் உதவி தேவைப்படுகிறது.


இந்த காலகட்டத்தில், குழந்தை சுரண்டல் உள்ளடக்கத்தை பரப்பியதற்காக ட்விட்டர் நிறுவனம் அரை மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியது. முந்தைய ஆறு மாதங்களை காட்டிலும் 31 சதவீதம் அதிகமான ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் மாதத்தில், குழந்தைகள் ஆபாசப் புகார் விவகாரத்தை பொறுத்தவரை ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட பதில்கள் முழுமையாக இல்லை. அதில் ஆணையம் திருப்தி அடையவில்லை என்றும் டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்திருந்தார்.