தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கடந்த ஓரிரு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.


இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


மேலும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் வானம் காணப்பட்டது.


பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் சற்று சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.