டி20 உலகக் கோப்பை 2022 தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று தொடங்க உள்ளது. முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் 4 அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் மோதும். சூப்பர் 12 சுற்றுக்கு இந்தியா,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இந்தச் சூழலில் இந்திய அணியின் முதல் போட்டி வரும் அக்டோபர் 23ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி நேற்று ஆஸ்திரேலிய புறப்பட்டு சென்றது.
இந்நிலையில் இந்திய அணி வரும் அக்டோபர் 10 மற்றும் 13ஆம் தேதிகளில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியில் களமிறங்க உள்ளது. இந்தப் போட்டிகள் வரும் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகளில் விளையாடி இந்திய அணியின் வீரர்கள் தொடர்பான முடிவை அணி நிர்வாகம் எடுக்கும் என்று தெரிகிறது. ஏற்கெனவே வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிற்கு பதிலாக யார் என்பதை ஆஸ்திரேலியாவில் தான் முடிவு செய்வோம் என்று தெரிவித்திருந்தார். அதற்கு இந்த நான்கு பயிற்சி போட்டிகள் நல்ல வாய்ப்பாக அமையும் என்று தெரிகிறது.
இந்தப் போட்டிக்காக பெர்த் மைதானத்தில் வரும் இந்திய ரசிகர்களாக சிறப்ப ஏற்பாடாக இந்திய உணவை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது. அதில், “இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியை காண வரும் இந்திய ரசிகர்களுக்காக இந்திய உணவுகள் தயாரிக்கப்பட உள்ளன. ட்வின்ஃபிளேம் என்ற ஓட்டலுடன் சேர்ந்து இந்த ஏற்பாடை செய்துள்ளோம்” எனப் பதிவிட்டுள்ளது.
மேலும் படிக்க: தென் ஆப்பிரிக்காவை அலறவிட்ட சஞ்சு சாம்சனின் ஹை ஸ்கோர் இதுதான்!