சென்னையில் பெய்த கனமழை காரணமாக விமானம் தாமதம் ஆனதால் இளையராஜா கிட்டத்தட்ட 6 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருப்பு அறையில் காத்திருந்தார். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றும் இன்று அதிகாலையும் மழை பெய்தது. குறிப்பாக அரும்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, காசிமேடு, ராயப்பேட்டை, வேளச்சேரி என பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானங்கள் தாமதம் ஆகும் சூழ்நிலை உருவானது. இதுமட்டுமல்லாமல் மோசமான வானிலை, மேகக்கூட்டம் போன்ற காரணங்களால் விமானங்கள் புறப்படுவதிலும் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. 




குறிப்பாக, துபாயிலிருந்து 216 பயணிகளுடன் இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு வந்த எமரேட்ஸ் ஏா்லைன்ஸ், லக்னோவிலிருந்து இரவு 8.35 மணிக்கு 114 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ்,மதுரையிலிருந்து 62 பயணிகளுடன் இரவு 8.45 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் ஆகிய 3 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.


அதைப்போல் சென்னையிலிருந்து திருச்சி,மும்பை,டில்லி,பெங்களூரு செல்ல வேண்டிய 4 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து 216 பயணிகளுடன் சென்னை வந்த எமரேட்ஸ் ஏா்லைன்ஸ்,பக்ரையினிலிருந்து 182 பயணிகளுடன் சென்னை வந்த கல்ப் ஏா்வேஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத் மற்றும் பெங்கருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.


இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். 7 முதல் 8  மணி நேரமாக சென்னை விமானநிலையத்தில் ஏராளனமான பயணிகள் காத்து இருந்தனர். காத்திருந்த இருந்த பயணிகளுக்குமாற்று ஏற்பாடுகளும் சரிவர செய்யப்படவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டு வருகிறது. இதில் இசையமைப்பாளரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜாவும் காத்து இருந்தார்.   




 


ஹங்கேரிக்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக செல்ல வேண்டிய அவர் எம்.பி என்பதால் விஐபி பகுதியில் காத்திருந்தார். அவர் செல்ல வேண்டிய விமானம் தாமதம் ஆனது. இந்த விமானத்தில் முதலில் துபாய் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் ஹங்கேரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.






ஆனால் விமானம் தாமதம் காரணமாக, சுமார் 7 மணி நேரம் அவர் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டார். அதன் பிறகு வானிலை சரியானதால் 7 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். அப்போது இளையராஜா கொஞ்சம் கோபமடைந்ததாக சொல்லப்படுகிறது.