தமிழ் திரை இசையுலகில் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் நீங்காத இடத்தை பிடித்திருக்கார் என்றால் அது நம் இளையராஜா தான். அன்னகிளியில் தொடங்கி இன்று வரை நம்மில் பலரின் உள்ளத்தில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார். தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் இசையமைத்து பல்வேறு பாடல்களை இவர் நமக்கு அளித்துள்ளார். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த பெருமையையும் இவரை சேரும். இத்தகைய சிறப்பு மிக்க  ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்ற பாடல் வரிகளே உள்ளது. அதற்கும் அவரே இசையமைத்துள்ளார். 


அப்படி அவர் தற்போது கையை வச்சுருக்கும் இடம் ட்விட்டர் பக்கம் தான். ட்விட்டர் பக்கத்தில் 2015ஆம் ஆண்டு முதல் இளையராஜா இணைந்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து சில ட்வீட்களை செய்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் இவருடைய படம் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்று இருந்தது. அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருந்தார். 


அதன்பின்னர் கடந்த 25ஆம் தேதி திடீரென தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு இசை வீடியோவை போட்டு தன்னுடைய ரசிகர்களாக இது இன்று காலை எனக்கு உதித்த ட்யூன் என்று போட்டிருந்தார். இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் இசை இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதுவரை திரைப்படங்களில் பாடல்களுக்கு இசையமைத்த ராஜா எங்களுக்காக ஒரு இசையை அமைத்துள்ளார் என்று பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். 






எப்போதும் தன்னுடைய ரசிகர்களுக்கு இசை விருந்து படைப்பதில் ராஜாவுக்கு நிகர் அவர் மட்டும் தான். ஏற்கெனவே ஒரு தனியார் இசை நிகழ்ச்சி விழாவில் தன்னுடைய தென்பாண்டி சீமையிலே பாட்டை தன்னுடைய ரசிகர்களுக்கு ஏதுவாக அவர் மாற்றி பாடியிருந்தார். அதை அவர், 


“ஏழு ஏழு கடல் கடந்து இங்கு வந்து வாழ்பவரே என்னாளும் உமக்கெனவே இசை தொடுப்பேனே…. எங்கோ ஓர் மண்ணில் பிறந்தாலும் எங்கோர் மண்ணில் வாழ்ந்தாலும் உன்னையும் என்னையும் இணைப்பது எது உயிரின் மேலே இசைதானே. மீளாத சோகம் என்ன தாழாத துயரம் என்ன சொல்லாமல் துடைப்பது எது என் இசை தானே.உன் வாழ்வில் சில நொடிகள். என் வாழ்வில் சில நொடிகள் என்றும் நினைவில் இருப்பது இந்நொடி தானே...”






எனக் கூறி முடித்திருப்பார். அப்போது முதல் இளையராஜா தன்னுடைய ரசிகர்களின் எவ்வளவு அன்பு வைத்திருப்பார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய சிறப்பு மிக்க இசைஞானி தற்போது ட்விட்டரில் பக்கத்தில் இணைந்திருப்பது பலருக்கும் நல்ல மகிழ்ச்சியை தந்துள்ளது. அவர் விரைவில் ட்விட்டர் ஸ்பேசஸில் ரசிகர்களுடன் உரையாடுவார் என்று அவருடைய ரசிகர்கள் ஆவலுடம் காத்து கொண்டிருக்கின்றனர். அது நடந்தால் இசைஞானியின் ரசிகர்களுக்கு அது வாழ்வில் மறக்க முடியாத சில நொடிகளாக அமையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. 


மேலும் படிக்க: Simbu Hansika Reunion: "எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.." ஹன்சிகா பற்றி சிம்பு கொடுத்த ஷாக் நியூஸ்