தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் புலிக்குத்தி பாண்டி. இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு தற்போது ‘டாணாக்கரன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் தமிழ் இயக்கி இருக்கிறார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை மக்கள் இயக்குனராக அறியும் முன், முரட்டுத்தனமான வில்லனாக ஜெய் பீம் படத்தில் அறிந்ந்துள்ளனர். மேலும், இயக்குநர் தமிழ் எடுத்திருக்கும் திரைப்படம் டாணாக்காரன் சமீபத்தில் தான் ஓடிடியில் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு பலரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது. ஆனாலும் மக்களிடையே இவ்வளவு கொடூரமாக போலீசில் துன்புறுத்துவார்களா என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. அது குறித்து கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறி இருக்கிறார். 



அவர் பேசுகையில்,"காவல்துறையில் 12 வருடங்கள் பணியாற்றினேன். அதற்குப் பிறகுதான் சினிமாவுக்குள் நுழைந்தேன். கண்டிப்பாக பிரச்சனைகள் இருக்கிறது. நான் பேட்ஜில் நடந்ததை மட்டும் வைத்து நான் இந்த படத்தை இயக்கவில்லை. இதற்கு முன்னதாக இருந்த பல்வேறு பேட்ஜ் நண்பர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தையும் தொகுத்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன். காவலர் பயிற்சிப் பள்ளியில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதை தான் நான் படத்தில் காண்பித்திருக்கிறேன். இந்த படம் பார்த்துவிட்டு பேட்டி அளித்த எஸ்பி ஒருவர் தம்பி கொஞ்சமாதான் காட்டிருக்காரு, நானெல்லாம் இத விட ஒரு படி மேல கஷ்டப்பட்டு இருக்கேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாம, இந்த படத்தை பார்த்த போலீஸ்காரங்க யாருமே ஏன் டிப்பார்ட்மெண்ட் விஷயத்தை வெளில போய் சொல்றீங்கன்னுலாம் கேக்கல. பாராட்டதான் செய்யுறாங்க.



லால் செஞ்ச கதாபாத்திரம் போலவே ஒருவர் இருந்தார். அவர் தேசிய அளவுல கோல்டு மெடல் எல்லாம் வாங்குனவரு, மிகப்பெரிய ஜீனியஸ். எல்லா வருஷமும் அவரோட பரேட்தான் ஜெயிக்கும், தோத்ததே இல்ல. துப்பாக்கில விளையாடுவாரு, ஒரு போலீஸா ரொம்ப சிறந்த அதிகாரி. இன்ஸ்ட்ரக்டர்களுக்கே க்ளாஸ் எடுப்பார். ஆனால் மனிதாபிமான அடிப்படையில எங்களால ஏத்துக்க முடியல. நான் படத்துல சொன்ன மாதிரியே அவரோட பேச்ல இருந்து நெறைய பேர் தற்கொலை பண்ணிருக்காங்க. ஒருத்தர உடல்ரீதியா ஃபிட்டாக வைக்க பயிற்சி கொடுக்குறதுல தவறே இல்ல. ஆனா மன ரீதியா ட்யூன் பண்றத ஏத்துக்க முடியாது. காவலர்களுக்கு பிரச்சனை நிறைய இருக்கு, லீவ், ஒர்க் லோடு, இதெல்லாம் அவங்களுக்கு மன அழுத்தமா மாறுது. இன்னைக்கு ஹார்ட் அட்டாக்ல அதிகமா இறப்பவர்கள் காவல்துறைல இருக்காங்கன்னு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் சொல்லுது. நாம எளிதா சொல்லிட்றோம், காவலர்கள் தொப்பை வச்சுருக்காங்கன்னு, ஆனா அது ஏன்னு யோசிக்குறது இல்ல. போலீஸ் என்னைக்குமே சரியான நேரத்துக்கு தூங்கி எழுந்தது இல்ல, அவன் எப்படி அவன ஃபிட்டா வச்சுக்க முடியும். அவனுக்கு நேரமே கிடையாது அதுக்கெல்லாம். போலீசுக்கு சப்போர்ட் பன்றேன்னு இல்ல, இதையெல்லாம் ஏன்னு ஒருத்தர் பேசணும்ல" என்றார்.