தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். ஷங்கர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜெண்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 


தனது 28 ஆண்டுகால சினிமா பயணத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக ஷங்கர் வலம் வருகிறார். தான் சினிமாவில் பெரியளவில் சாதித்திருந்தாலும் ஷங்கரின் குடும்பத்தினர் யாரும் சினிமா பக்கம் வராமலேயே இருந்தனர். ஷங்கருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இளையமகள் அதிதி தற்போது சினிமாவுக்குள் கால்பதித்துள்ளார்.  முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தில் நடித்துள்ளார். சிம்பு நடிப்பின் கொரோனாகுமாரிலும் நடித்து வருகிறார்.






சினிமாவில் தீவிரமாக இறங்கியுள்ள அதிதி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிதிக்கு கல்யாணம் என்ற செய்தி கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது. திருமணத்துக்கான அழைப்பிதழை இயக்குநர் ஷங்கர் சினிமா வட்டாரத்தின் பலருக்கு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.  இப்போதுதானே சினிமாவுக்குள் எண்ட்ரி ஆனார். அதற்குள் திருமணமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்ப, ஷங்கர் அழைப்பிதழ் கொடுப்பது உண்மைதான் என்றும், ஆனால் அது அதிதி திருமணத்துக்கு இல்லையென்றும் நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. 






கடந்த ஆண்டு முடிந்த மூத்த மகளின் திருமணம் கொரோனா காரணமாக எளிமையாகவே நடைபெற்றது. திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் அழைப்பு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அதற்கான ஒரு விழாவை மேமாதம் நடத்த ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான அழைப்பிதழைத்தான் அவர் விநியோகித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


திரையுலகில் கால்பதித்த பிறகு சோஷியல் மீடியாவிலும் ஆக்டீவாக இருக்கிறார் அதிதி. தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.