ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் இந்தியா முழுவதும் முதல் நாளில், ரூ.45 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜெயிலர் திரைப்படம்:


ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் சினிமா ரசிகர்களை திருவிழாவாக கொண்டாட வைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, அறந்தாங்கி நிஷா, சிவராஜ்குமார், சுனில், மிர்னா, வசந்த் ரவி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ள ஜெயிலர் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும்  ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்:


இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் பல்வேறு முந்தைய சாதனைகளை தகர்த்து, புதிய சாதனைகளை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த படத்திற்கான முதல் நாள் டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்த நிலையில், மொத்தமாக இந்த படம் முதல் நாளில் எவ்வளவு வசூலித்தது என்பது தொடர்பான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ரூ.45 கோடி வசூல்:


ஆரம்ப கட்ட தகவல்களின் படி, ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் தனது முதல் நாளில் 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராஸ் தொகை ரூ.52 கோடியை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் ரூ. 23 கோடி, கர்நாடகாவில் ரூ.11 கோடி, கேரளாவில் 7 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.7 கோடி மற்றும் மற்ற மாநிலங்களில் சேர்த்து 3 கோடி ரூபாய் வரை ஜெயிலர் படம் முதல் நாளில் வசூலித்து இருக்கும் என கூறப்படுகிறது.


புதிய சாதனைகள்:


நடப்பாண்டில் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற தமிழ்படம், கர்நாடகாவில் தமிழ் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிலான ஓபனிங், கேரளாவில் நடப்பாண்டில் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடப்பாண்டில் பெரிய ஓபனிங் பெற்ற தமிழ் சினிமா என்ற பல்வேறு பெருமைகளை ஜெயிலர் படம் பெற்றுள்ளது. அதேநேரம் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதனிடையே, ஜெயிலர் திரைப்படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் முதல் நாளில் மட்டும் 1.45 மில்லியன் டாலர்கள் வசூலித்ததாக கூறப்படுகிறது.


பீஸ்டிடம் கவிழ்ந்த ஜெயிலர்?


விஜய் - நெல்சன் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், இந்தியாவில் மட்டுமே 50 கோடிகளை கடந்து, சர்வதேச அளவில் முதல் நாளில் சுமார் 70 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அந்த படத்தை போன்றே வேறு எந்த பெரிய படங்களும் வெளியாகாத நாளில், சோலோவாக தான் ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ஆனால், பீஸ்ட் படத்தின் வசூலை ஜெயிலர் படம் முறியடித்ததாக தெரியவில்லை. ஒருவேளை ஜெயிலர் படத்தின் வசூல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்போது இந்த நிலை மாறலாம்.  அதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.