சீனியர் நடிகராகவும் , பா.ஜ.க அரசியல் பிரமுகராகவும் அறியப்படுபவர் ராதா ரவி. இவர் பிரபல நடிகர் எம்.ஆ.ராதாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட ராதா ரவி , பெரிய ஹீரோக்கள் படங்கள் சரிவர ஓடவில்லை. சிறிய பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது போல பேசியிருந்தார். இவர் பேசியதை வைத்து சிலர் வலிமை படத்தைதான் மறைமுகமாக சாடுகிறார் என்கின்றனர். அப்படி அவர் என்ன பேசியிருக்கிறார் என்பதை கீழே தொகுத்துள்ளோம்.






 


"சினிமா வாழ வேண்டும் என்றால் சிறிய பட்ஜெட் படங்களும் ஓட வேண்டும். அது ஓடுமா? ஓடாதா என கவலைப்பட வேண்டாம். இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படமே  வெற்றிகரமாக இரண்டாவது நாள்னுதான் போடுறாங்க. நான் வெற்றிகரமான 20-வது நாள் அப்படினு படிச்சுட்டேன். எப்போது இரண்டாவது நாள்னு வந்ததோ அப்போதே முடிஞ்சு போச்சு. சிறிய பட்ஜெட் படங்களெல்லாம் கவலைப்படாதீங்க. 4, 5 நாட்கள் ஓடினாலே நமக்கு லாபம்தான். எல்லா இடங்கள்லையும் ரிலீஸ் ஆகும்ல அதான். பெரிய பட்ஜெட் படத்தை எடுத்துட்டு நீங்க அவங்கள பிடிச்சு தொங்கிட்டு , இவங்கள பிடிச்சு தொங்கிட்டு இருக்காதீங்க. உங்கள வந்து எல்லாரும் தொங்கனும்னா நீங்க சின்ன பட்ஜெட் படம்தான் எடுக்கணும். நான் இயக்குநர் செல்வமணிகிட்ட கூட சொல்லிக்கிட்டு இருந்தேன். நான் 10 படங்கள் எடுக்க போறேன். எல்லாமே லாப நோக்கில் இல்லாமல் , சின்ன பட்ஜெட் படங்களாகத்தான் எடுக்க போறேன். சின்ன இயக்குநர்கள் எல்லோரையும் சினிமாவிற்குள் கொண்டு வர வேண்டும் . அப்போதுதான் சினிமா வாழும். எத்தனை பேர் சிரமப்படுகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கும் பெஃப்சிக்கும் இடையில் அமைச்சரை மையமாக வைத்து ஒரு ஒப்பந்தம் நடக்க போகிறது. இதன் மூலம் என்ன தெரிகிறது. அரசாங்கம் சினிமாவை வாழ வைக்கப்போகிறது “ என குறிப்பிட்டிருக்கிறார்.