லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம்  'விக்ரம்' . இந்த திரைப்படம் கமல்ஹாசன் கெரியரில் இதுவரையில் கொடுக்காத பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனை கொடுத்துவிட்டது. கமல்ஹாசன் ஒரு தீவிர சினிமாவதி என்பது நாம் அறிந்ததுதான். சினிமாவில் அத்தனையும் அத்துப்படி உலகநாயகனுக்கு ! . 10 வருடங்களுக்கு பிறகு சினிமா எப்படியான மாற்றத்தை காணும் என்பதை முன்கூட்டியே கணித்து , அதனை படமாகவும் எடுத்துவிடுவார் கமல். 







ட்ரீம் புராஜெக்ட் :


கலைத்தாகம் கொண்ட கமல் என்னும் கலைஞனின் கலையுலக பயணத்தில் லட்சிய திரைப்படமாக இருப்பது 'மருதநாயகம்'.1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த படத்தின் புகைப்படங்கள் , சில முன்னோட்ட காட்சிகளே நமக்கு மெய் சிலிர்க்க செய்துவிட்டன. படத்தை மீண்டும் இயக்க தற்போது கமல்ஹாசன் முனைப்பு காட்டி வருகிறார். இதற்கான பட்ஜெட் மற்றும் கதைக்களம் குறித்த விவரங்களை பிரபல சோனி நிறுவனத்திற்கு அளித்திருக்கிறாராம் கமல் . அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தால் , தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படத்தை மீண்டும் துவங்க தயாராகிவிடுவார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.






லோகேஷ் மருதநாயகத்தை இயக்குவாரா?


இயக்குநர் லோகேஷ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் . அவர் இயக்க வருவதற்கு முன்னால் ஒரு ஃபேன் பாயாக கமல்ஹாசனின் காரை எல்லாம் தொட்டு பார்த்ததாக தெரிவித்தார். அதனால்தானோ என்னவோ விக்ரம் படத்தின் வெற்றிக்கு பரிசாக விலை உயர்ந்த காரையே கமல் லோகேஷுக்கு பரிசாக அளித்துவிட்டார். விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மருதநாயகம் திரைப்படம் குறித்து கேட்டாராம் லோகேஷ். அது பற்றி பேச ஆரமித்தால் கமல் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்க துவங்கிவிடுவார் என்கிறார் . ஒருமுறை இப்படித்தான் மதிய உணவு சாப்பிடும் பொழுது கேட்டு , சாப்பாட்டை பாதியிலேயெ வைத்துவிட்டு கமல் பேச , லோகேஷ் கையில் பருக்கைகளுடன் எழுந்து நின்று அவர் பேசிய வசனங்களை மெய் மறந்து கேட்டுக்கொண்டிருந்ததாக தெரிவித்தார். மருதநாயகம் படத்தை கமல் சார் என்னிடம் கொடுத்து இயக்க சொன்னால் நிச்சயம் ஏற்க மாட்டேன் . அது அவருடைய உழைப்பு . அந்த படத்தை புரிந்து நான் இயக்க வேண்டுமென்றால் இன்னும் 10 வருடங்கள் ஆகும் . வாய்ப்பு கிடைத்தால் கமல் சார் எடுத்து வைத்த அந்த அரை மணி நேர மருதநாயகம் ஃபுட்டேஜை காட்டச்சொல்ல வேண்டும் என்றார் லோகேஷ் .